பக்கம்:மணி பல்லவம் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

71

பெரிய கப்பல்கள் எல்லாம் என் தந்தையாருக்குச் சொந்தமானவை. பட்டினப்பாக்கத்தில் எங்கள் மாளிகைக்கு முன்புறம் நடந்து போகும் போதுகூட இந்த யவனர்களில் பலர் செருப்பணிந்த கால்களோடு செல்வதற்குக் கூசுவார்கள். எங்கள் குடும்பம் என்றால் இவர்களுக்கு மதிப்புக்குரிய தெய்வ நிலையம் போல் பணிவும் அன்பும் உண்டாகும். நான் சுட்டு விரலை அசைத்தால் அதன்படி ஆடுவார்கள் இந்தத் தடியர்கள். நீங்கள் அவருடைய ஓவியத்தை எங்கள் மாளிகையில் வந்து வரையலாம். அவரைத் தாக்க வந்த இதே ஆட்களை உங்களையும் அவரையும் பல்லக்கில் வைத்து எங்கள் மாளிகை வரை தோள் வலிக்க சுமந்துவரச் செய்கிறேன், பார்க்கிறீர்களா?” என்று ஓவியனிடம் கர்வமாகக் கூறிவிட்டு அந்த யவனர்களை இன்னும் அருகில் அழைத்து ஏதோ கட்டளையிட்டாள் அவள்.

உடனே அவர்கள் ஓடிப்போய் எங்கிருந்தோ இன்னொரு பல்லக்கைக் கொண்டு வந்து வைத்தார்கள். “நீங்களும் உங்கள் நண்பரும் ஏறிக் கொள்ளலாம்” என்று சிரித்துக் கொண்டே பல்லக்கைச் சுட்டிக் காட்டினாள் அவள். முதல் நாள் மாலை கடற்கரையில் மணிமாலை பரிசளிக்க வந்ததிலிருந்து தொடர்ந்து தன் வாழ்வில் குறுக்கிடும் அந்த அழகியைச் சற்றே வெறுப்போடு பார்த்தான் இளங்குமரன். அவள் வந்து நின்றதும் சுற்றியிருந்தவர்கள் பரபரப்படைந்து பேசிக் கொண்டதிலிருந்து அவளுடைய பெயர் ‘சுரமஞ்சரி’ என்பதை அவன் தெரிந்து கொண்டிருந்தான். அவ்வளவு பெரிய கூட்டத்தில் தன்னுடைய ஆற்றலால் தான் எதிரிகளை வெல்ல முடியாதபோது அவளே வந்து அபயமளித்துக் காத்தது போல் மற்றவர்கள் நினைக்க இடம் கொடுத்தது அவனுக்கு வருத்தமாக இருந்தது. தான் பெருமையடித்துக் கொண்ட மாபெரும் தன் மானம் அந்த நாளங்காடி நாற்சந்தியில் அவளால் சூறையாடப்பட்டதை அவன் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/72&oldid=1141693" இலிருந்து மீள்விக்கப்பட்டது