பக்கம்:மணி பல்லவம் 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

மணிபல்லவம்

கொண்டிருந்தனர். வீரர்களும், வேறு பலரும் அலங்கரிக்கப் பெற்ற குதிரைகளில் ஏறி வீதிகள் நிறையச் சென்று கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். எல்லா இடங்களிலும் அகன்றும், ஒரே அளவாயும் இருந்த வீதிகளில் விண்தொட நிமிர்ந்த வியன்பெரு மாளிகைகளின் மேல் மாடங்களிலிருந்து கிளிகளும், மணிப் புறாக்களும் பறந்து செல்வதும், வந்து அமர்வதுமாகக் காட்சியளித்தன. பட்டினப்பாக்கத்து வீதிகளுக்கு இயற்கையாகவே பொருந்தியிருந்த இந்த அழகுகளை இந்திர விழாவும் வந்து சேர்ந்து இருமடங்காக்கியிருந்தது. வீதிகளில் எல்லாம் விழாவுக்காகப் பழைய மணல் மாற்றிப் புது மணல் பரப்பியிருந்தார்கள். வாழையும் கமுகும் கரும்பும் நாட்டி வஞ்சிக் கொடிகளையும், மற்றும் பல பூங்கொடிகளையும் தோரணமாகக் கட்டியிருந்தார்கள். மங்கல நிறை குடங்களும் பொன்னாலாகிய பாவை விளக்குகளும் வீடுகளின் முன்புறங்களில் வைக்கப்பட்டிருந்தன. வீட்டு முன்புறத் தூண்களில் ஒளிக்கதிர் விரித்துக் குளிர் சுடர் பரப்பும் முத்துமாலைச் சரங்களைத் தோரணங்களாகக் கட்டியிருந்தார்கள். சில இடங்களில் சித்திரப் பந்தல்களும் போட்டிருந்தார்கள்.

மாரிக்காலத்தே புதுவெள்ளம் வந்து ஆறுபோல் வீதிகள் நிறைவாகவும், கலகலப்பாகவும் இருந்தன. ஆனால் பல்லக்கில் அமர்ந்திருந்த இளங்குமரன் உள்ளத்தில் இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்கத் தாழ்வுணர்ச்சி தான் அதிகமாயிற்று. அவனுக்கு எதிரே வீற்றிருந்த ஓவியனோ அரும்பெரும் புதையலைக் கண்டெடுத்த ஏழைபோல் பல்லக்குக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்து மகிழும் தாகத்தோடு வீதிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். முன்னால் சுரமஞ்சரி என்னும் அந்தப் பெண்ணின் பல்லக்கும் அதைத் தொடர்ந்து இரண்டாவதாக இளங்குமரனும் ஓவியனும் இருந்த பல்லக்குமாகச் சென்று கொண்டிருந்தன. இரண்டு பல்லக்குகளின் முன்புறமும் ஆலவட்டம், சித்திரப்பட்டுக்குடை, தோரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/81&oldid=1141739" இலிருந்து மீள்விக்கப்பட்டது