பக்கம்:மணி பல்லவம் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

மணிபல்லவம்

நிலையில் உன்னை வீட்டில் கொண்டு போய்விடுவதற்காக எங்களில் யாரும் உன்னோடு துணை வருவதற்கில்லை. ஆனால் நீ வழி மயங்காமல் வீடு போய்ச் சேருவதற்காக உன்னை இந்த நாளங்காடியிலிருந்து அழைத்துப் போய்ப் புறவீதிக்குச் செல்லும் நேரான சாலையில் விட்டு விடுகிறேன். அங்கிருந்து இந்திர விழாவுக்காக வந்து திரும்புகிறவர்கள் பலர் புறவீதிக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து நீ வீட்டுக்குப் போய்விடலாம்” என்று தமையன் கூறியதை முல்லை மறுக்காமல் ஒப்புக் கொண்டாள். தமையனுடைய அவசரத்துக்காக அவள் வீட்டுக்குப் போக இணங்கினாளே தவிர உள்ளூரத் தானும் அவர்களோடு செல்ல வேண்டும் என்றும், சென்று இளங்குமரனுக்கு என்னென்ன நேருகிறதென்று அறிய வேண்டும் என்றும் ஆசையிருந்தது அவளுக்கு. வேறு வழியில்லாமற் போகவே அந்த ஆசைகளை மனத்துக்குள்ளேயே தேக்கிக் கொண்டாள் அவள்.

“நண்பர்களே! நீங்கள் சிறிது நேரம் இங்கேயே நின்று கொண்டிருந்தால் அதற்குள் இவளைப் புறவீதிக்குப் போகும் சாலையில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு வந்துவிடுவேன். அப்புறம் நாம் இளங்குமரனைத் தேடிக் கொண்டு பட்டினப்பாக்கத்துக்குச் செல்லலாம்” என்று சொல்லி உடன் வந்தவர்களை அங்கே நிற்கச் செய்து விட்டு முல்லையை அழைத்துக் கொண்டு கதக்கண்ணன் புறப்பட்டான். எள் விழ இடமின்றிக் கூட்டமாயிருந்த பூத சதுக்கத்தில் வழி உண்டாக்கிக் கொண்டு போவது கடினமாக இருந்தது.

போகும்போது இளங்குமானைப் பற்றி மீண்டும் மீண்டும் சில கேள்விகளைத் தன் அண்ணனிடம் தூண்டிக் கேட்டாள் முல்லை. அந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் கதக்கண்ணன் விவரமாக மறுமொழி கூறவில்லை, சுருக்கமாக ஒரே ஒரு செய்தியை மட்டும் முல்லையிடம் கூறினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/91&oldid=1141754" இலிருந்து மீள்விக்கப்பட்டது