பக்கம்:மணி பல்லவம் 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

93

இந்திர விழாக் கூட்டத்தில் கலந்து மறைந்த பின்பு திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போயிற்று. அவள்தான் மெல்ல நடந்தாள். அவளுடைய நெஞ்சத்திலோ பலவித நினைவுகள் ஓடின. ‘பட்டினப்பாக்கத்தில் அந்தப் பெண்ணரசி சுரமஞ்சரியின் மாளிகையில் இளங்குமரனுக்கு என்னென்ன அநுபவங்கள் ஏற்படும்? அந்த ஓவியன் எதற்காக அவரை வரைகிறான்? அந்தப் பெண்ணரசிக்காக வரைந்ததாக கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பேசிக் கொண்டார்களே! அப்படியானால் அவருடைய ஓவியம் அவளுக்கு எதற்கு?’ இதற்கு மேல் இந்த நினைவை வளர்க்க மறுத்தது அவள் உள்ளம், ஏக்கமும், அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண் மேல் பொறாமையும் ஏற்பட்டது முல்லைக்கு. அத்தோடு ‘தன் தமையனும் மற்ற நண்பர்களும் எதற்காக இவ்வளவு அவசரமாய் இளங்குமரனைத் தேடிக் கொண்டு போகிறார்கள்?’ என்ற வினாவும் அவளுள்ளத்தே தோன்றிற்று. இப்படி நினைவுகளில் ஓட்டமும் கால்களில் நடையுமாகப் புறவீதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் முல்லை. நுண்ணுணர்வு மயமான அகம் விரைவாக இயங்கும்போது புற உணர்வுகள் மந்தமாக இயங்குவதும், புற உணர்வு விரைவாக இயங்கும்போது அகவுணர்வுகள் மெல்லச் செல்வதும் அப்போது அவள் நடையின் தயக்கத்திலிருந்தும், நினைவுகளின் வேகத்திலிருந்தும் தெரிந்து கொள்ளக்கூடிய மெய்யாயிருந்தது. நினைவுகளின் வேகம் குறைந்ததும் அவள் நடையில் வேகம் பிறந்தது.

தன் வீட்டை அடையும்போது தன் தந்தை வீட்டிற்குள்ளே அருட்செல்வ முனிவரின் கட்டிவருகே அமர்ந்து அவரோடு உரையாடிக் கொண்டிருப்பார் என்று முல்லை எதிர்பார்த்துக் கொண்டு சென்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக வீட்டு வாயில் திண்ணையில் முரசமும் படைக் கலங்களும் வைக்கப்பட்டிருந்த மேடைக்கருகிலே கன்னத்தில் கையூன்றி வீற்றிருந்தார் வீரசோழிய வளநாடுடையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/94&oldid=1141758" இலிருந்து மீள்விக்கப்பட்டது