பக்கம்:மணி பல்லவம் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

மணிபல்லவம்

பிள்ளைகள் காரியம் ஆண் பிள்ளைகளோடு போகட்டும்’ என்று அண்ணனே கூறியதை நினைத்தோ, என்னவோ தன் நாவை அடக்கிக் கொண்டாள் முல்லை. ஆயினும் அவள் மனத்தில் காரணமும் தொடர்பும் தோன்றாத கலக்கமும் பயமும் உண்டாயின. தன் நெஞ்சுக்கு இனிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும் இளங்குமரன் என்னும் அழகைப் பயங்கரமான பகைகள் தெரிந்தும், தெரியாமலும் சூழ்ந்திருக்கின்றன என்பதை உணரும் போது சற்றுமுன் நாளங்காடியில் அவன் மேற் கொண்ட கோபம்கூட மறந்து விட்டது அவளுக்கு, நீர் பாயும் வாய்க்கால்களில், நீர் பாயாத நேரத்து நிமிர்ந்து நிற்கும் புல் நீர் பாயும்போது சாய்ந்து போவதுபோல் அவள் உள்ளத்தில் எழுந்திருந்த சினம் அவனைப் பற்றிய அனுதாப நினைவுகள் பாயும்போது சாய்ந்து படிந்தது; தணிந்து தாழ்ந்தது.

பூதச் சதுக்கத்து இந்திர விழாவின் கூட்டமும் ஆரவாரமும் குறைந்து நடந்து செல்ல வசதியான கிழக்குப் பக்கத்துச் சாலைக்கு வந்திருந்தார்கள் முல்லையும், கதக்கண்ணனும். விண்ணுக்கும் மண்ணுக்கும் உறவு கற்பிக்க எழுந்தவைபோல் இருபுறமும் அடர்ந்தெழுந்த நெடுமரச் சோலைக்கு நடுவே அகன்று நேராக நீண்டு செல்லும் சாலை தெரிந்தது. விழாக் கொண்டாட்டத்துக்காக நாளங்காடிக்கும் அப்பாலுள்ள அகநகர்ப் பகுதிகளுக்கும் வந்துவிட்டு புறநகர்ப் பகுதிகளுக்குத் திரும்பிச் செல்வோர் சிலரும் பலருமாகக் கூட்டமாயும், தனித் தனியாயும் அந்தச் சாலையில் சென்றுகொண்டிருந்தார்கள்.

“முல்லை! நீ இனிமேல் இங்கிருந்து தனியாகப் போகலாம். நேரே போனால் புறவீதிதான்; நிறைய மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள், ஒரு பயமுமில்லை” என்று கூறித் தங்கையிடம் விடை பெற்றுக் கொண்டு வந்த வழியே திரும்பி விரைந்தான் கதக்கண்ணன். முல்லை தயங்கித் தயங்கி நின்று அண்ணனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே கீழ்ப்புறச் சாலையில் நடந்தாள். அண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/93&oldid=1141756" இலிருந்து மீள்விக்கப்பட்டது