உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

395

“முடியாது.”

“இந்தக் கையின் துணையில்லையானால் பல்லாண்டு பெரிய மாளிகை வாழ்வும் எட்டிப் பட்டமும், பெருநிதிச் செல்வர் என்ற பீடும் நீங்கள் அடைந்திருக்க முடியுமா?”

“முடியாது.”

“இந்தக் கையின் துணையில்லையானால் பல்லாண்டுகளாக நீங்கள் செய்து வரும் கொலைகளும் பாதகங்களும், சூழ்ச்சிகளும் உலகத்துக்குத் தெரியாமல் காப்பாற்றியிருக்க இயலுமா?”

“இயலாது”

“நீங்கள் செய்திருக்கிற கொடுமைகளும், துரோகங்களும் வெளியானால் சுட்ட செங்கல்லைத் தலையில் வைத்து ஊர் சுற்றச் செய்து[1]அவமானப்படுத்தி நாடு கடத்துவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லையே.”

“சந்தேகமில்லைதான்.”

“நகைவேழம்பரின் குரல் உரத்து ஓங்க ஓங்கப் பெரு நிதிச் செல்வரின் குரலும், தோற்றமும் ஒடுங்கி நலிந்து கொண்டிருந்தன. ஒரு காலை நன்றாக ஊன்ற முடியாததால் ஏற்கெனவே சாய்ந்து கோலூன்றி நின்ற அவர் இந்தக் கேள்விகளால் தாக்குண்டு இன்னும் சாய்ந்தாற் போல் தளர்ந்து நின்றார். அவருடைய முகத்திலும், கண்களிலும் நடுக்கமும் பீதியும் தோன்றின. எதிரே நகைவேழம்பர் பாய்ந்து கிழிக்கப் போகிற புலியைப் போல் வலது கையைத் தூக்கிக் கொண்டு நின்றார். அவருடைய மெளனம் பேச்சைக் காட்டிலும் பயமூட்டுவதாயிருந்தது. மெளனத்தை உடைத்து விட்டு அவரே பேசத் தொடங்கினார்.

“இந்தக் கை ஓங்கிய வாள் இதுவரை தவறியதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமல்லவா?”

“நன்றாகத் தெரியும்?”


  1. குடிப்பெருமை மீறிப் பெருங்குற்றஞ் செய்தாரை இப்படி அவமானப்படுத்துதல் அந்தக் காலத்து வழக்கம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/101&oldid=1149901" இலிருந்து மீள்விக்கப்பட்டது