உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

மணிபல்லவம்

இந்திர விகாரத்துத் துறவியிடம் தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதைப் பற்றி அவள் குறிப்பிட்டபோது அவன் மனம் குன்றி நாணமடையும்படி நேர்ந்தது. சுரமஞ்சரியிடம் குன்றாமல் வளர்ந்திருந்த அவனுடைய அதே மனத்தின் இறுமாப்பு விசாகையிடம் குன்றித் தளர்ந்ததோடன்றிப் பக்தியாகவும் மாறியிருந்தது.

‘விசாகையின் கதை தனக்குத் தெரிய வேண்டியது அவசியம்’ என்று நாங்கூர் அடிகள் வற்புறுத்திக் கூறியிருந்த காரணத்தை இப்போதுதான் இளங்குமரன் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. மற்போர்களில் எதிர்த்து வந்தவர்களை முதுகுக்கு மண்காட்டி வென்றதற்காகவும், இளவட்டக் கற்களைத் தூக்கியதற்காகவும், குறிதவறாமல் அம்பு எய்ததற்காகவும், பெருமைப்பட்ட நாட்களை நினைவின் அடிமூலையிலிருந்து புரட்டிக் கொணர்ந்து இன்று எண்ணினால் அவை சிறுமை நிறைந்தவையாகத் தோன்றின. வேறு பெரிய செயல்களைச் செய்வதற்குக் கையாலாகாத காலத்தில் செய்த சிறுபிள்ளைச் செயல்களாக நினைத்துக் கொள்ள முடிந்ததே தவிர, இன்று அவனாலேயே அவற்றை மதிக்க முடியவில்லை.

ஞானப் பசியோடு திருநாங்கூருக்கு வந்த அன்றே அவன் மனத்தில் மதிப்பிழந்திருந்த அந்தப் பழம் பெருமைகள், விசாகை என்னும் புதுமையை அறிந்தபின் இன்னும் மதிப்பிழந்தன. நீண்ட சாலையில் பார்வைக்குள் பிடிபடாத தொலைவுக்குச் சென்றுவிட்ட உருவங்களைப் போல் அவை மனத்திலிருந்தே விலகலாயின.

இனி எதிர்வரும் காலத்தைப் பற்றி அவன் மனத்தில் எழுகின்ற கற்பனைகள் ஓங்கித் தொட முயன்று கொண்டிருந்த உயரம் வேறுவிதமாக இருந்தது.

உலகெங்கும் உள்ள பேரறிஞர்கள் ஒன்றுகூடி வரிசையாய்-அந்த வரிசைக்கு முடிவே தெரியாமல் - நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள் அப்படி நிற்பதால் நின்றபடியே தானாக நிறுவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/112&oldid=1149912" இலிருந்து மீள்விக்கப்பட்டது