நா. பார்த்தசாரதி
407
கொண்ட வீதி ஞான வீதியாகி இளங்குமரனின் கண்களுக்குத் தோன்றுகிறது. வீதியின் நடுவில் நின்று இருபுறமும் பார்க்கிறான் அவன். அவனுடைய வலது கையில் ஞானக்கொடி அசைந்தாடுகிறது. அந்த வீதியின் நெடுமை அவன் மனத்தில் மலைப்பை உண்டாக்குகிறது.
வீதியின் இருபுறமும் ஒளிமயமாய் நிற்கும் ஞானிகளுக்கு முன்னால் ஒவ்வொன்றாய் நாவல் மரக்கிளை ஊன்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஞானியின் கையிலும் அந்த ஞானத்தின் வெற்றிச் சின்னம்போல் ஒரு கொடியும் காட்சியளிக்கிறது. அவர்களோடெல்லாம் அறிவு வாதம் புரியவேண்டுமென்று இளங்குமரனுக்கு ஆசையாயிருக்கிறது.
வாதிட்டு வென்றபின் அத்தனை பேருடைய கொடிகளையும் வீழ்ச்சியுறச் செய்து நாவற் கிளைகளையும் பறித்து எறிந்துவிட்டு, ‘நாவலோ நாவல்’ என முழங்கிக் கொண்டே தான் அந்த வீதியின் முடிவு தெரிகிறவரை நடந்து சென்றாக வேண்டுமென்று இளங்குமரனுக்கு ஆசையாயிருந்தது, அதே சமயத்தில் தனக்கு அவ்வளவு சக்தியிருக்கிறதா என்ற பயமும், தயக்கமும் தடையாயிருக்கின்றன. ஆனால் மனமோ, ‘துணிந்து முன்னால் நடந்து போ’ என்று தூண்டுகிறது.
அன்று அந்த மாலை வேளையில் திருநாங்கூர் பூம்பொழிலின் தனிமையான பகுதி ஒன்றில் அமர்ந்து இளங்குமரன் இப்படித் தன் எதிர்காலத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தபோது தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த விசாகை அவனிருந்த நிலையைக் கண்டு அவனிடமே கேட்டாள்.
“எந்தக் கோட்டையைப் பிடிப்பதற்கு இவ்வளவு ஆழமான சிந்தனையோ?”
சிறிது நேரத்திற்குப் பின் இளங்குமரனிடமிருந்து இதற்குப் பதில் கிடைத்தது.