பக்கம்:மணி பல்லவம் 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

மணிபல்லவம்

“ஞானக் கோட்டையைப் பிடிப்பதற்கு”

“பெரிய ஆசையாக அல்லவா இருக்கிறது இது?”

“மன்னிக்க வேண்டும் அம்மையாரே! ஆசைகளை எல்லாம் மிக எளிதாக நீக்கிவிட்டு வந்திருக்கிற உங்களிடம் ஆசையைப் பற்றிச் சொல்வதற்காகக் கூசுகிறேன் நான்.”

“அப்படியில்லை கூசாமல் சொல்லுங்கள். இப்போது நீங்கள் கூறியது புதுமையான ஆசையாகத் தோன்றுகிறதே!” என்றாள் விசாகை.

இளங்குமரன் தன்னுடைய கற்பனையில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் இலட்சியத்தைத் தயங்கிய மொழிகளால் விசாகைக்குச் சொன்னான். அதைக் கேட்டு அவளுடைய முகம் அதில் ஏற்கெனவே அளவற்று நிறைந்திருக்கும் புனிதத் தன்மையே மேலும் பெருகினாற் போல் மலர்ந்தது. அவள் சிரித்தவாறே அவனை நோக்கி வினாவினாள்.

“உங்களுடைய இந்த ஆசையை யார் கேட்டால் மெய்யான பெருமகிழ்ச்சி ஏற்படுமென்பதை சொல்லட்டுமா?”

“ஏன்? அப்படியானால் உங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லையா என்னுடைய இந்த ஆசை” இளங்குமரன் அவளிடம் பதிலுக்குக் கேள்வி தொடுத்தான்.

“ஞானக் கோட்டையைப் பிடிக்கும் உங்களுடைய ஆசையைக் கேட்டு நானும், அடிகளும், எங்களைப் போன்ற பிறரும் அடைய முடியாத மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சியை வேறொருவர்தான் அடைய முடியும்”

“யார் அவர்?”

“உங்களைப் பெற்று உலகுக்கு அளித்த தாய்.”

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/114&oldid=1149914" இலிருந்து மீள்விக்கப்பட்டது