நா. பார்த்தசாரதி
409
என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுடைய இந்த ஆசையை அறிந்து உலகம் உங்களைச் சான்றாண்மை உள்ளவராக ஏற்றுப் புகழ்வதை உங்கள் தாய் கேட்க வேண்டும். உங்களைப் பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியை நீங்கள் புகழைப் பெறுகிற போது உங்கள் அன்னை ஒருத்தியால்தான் அடைய முடியும்..!”
இளங்குமரன் திருநாங்கூருக்கு வந்ததிலிருந்து எந்தக் கலக்கத்தை அடையாமல் மறந்திருந்தானோ, அந்தக் கலக்கத்தை விசாகை நினைவூட்டி விட்டாள். அவளுக்கு மறுமொழி கூறத் தோன்றாமல் கண்கலங்கினான் அவன். அவனுடைய கலக்கத்தை விசாகையும் கவனித்தாள்.
“ஏன் இப்படிக் கண் கலங்குகிறீர்கள்?”
“கண் கலங்காமல் வேறென்ன செய்வது? என்னைப் பெற்று மகிழ்ந்தவளைப் பார்த்தும் மகிழாத பாவி நான்.”
“இளங்குமரன் தாயில்லாப் பிள்ளையாக வளர்ந்திருப்பானோ?” என்று நினைத்தாள் விசாகை, அதை அவனிடம் அப்போது கேட்டால் அவனுடைய கலக்கம் அதிகமாகுமோ என்றெண்ணிக் கேட்காமல் அடக்கிக் கொண்டாள்.
“உங்கள் தாயைப் பற்றி உங்களுக்கு நினைவுண்டாக்கியது இப்படி ஒரு துயர விளைவைத் தரும் என்பது தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன்” என்று மன்னிப்பைக் கோரும் குரலில் கூறினாள் விசாகை. அதற்கும் இளங்குமரனிடமிருந்து பதில் இல்லை.
“அம்மா உன்னைக் காணும் மகிழ்ச்சியை உனக்கு அளிக்காமல், காணவில்லையே என்ற துயரத்தையே மகிழ்ச்சித் தாகமாகப் பெருக்கிக் கொண்டிருக்கிறாயே!” என்று தாயை எண்ணி ஏங்கினான் இளங்குமரன்.
அந்த நிலையில் இளங்குமரனைத் தனிமையில் விட்டுச் செல்வதே நல்லதென்றெண்ணி விசாகை அகன்றாள்.