416
மணிபல்லவம்
நெடுநேரத் தயக்கத்துக்கும், சிந்தனைக்கும் பின்பு பெருநிதிச் செல்வர் அந்த நடுநிசிப் பொழுதில் நகைவேழம்பருடனே தனியாகப் புறப்பட்டுச் சென்றார்.
நடந்து போகும்போது இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு காலைச் சாய்த்துச்சாய்த்து நடக்க வேண்டியிருந்ததனால், பெருநிதிச் செல்வர் வேகமாக நடக்க முடியாமல் திணறினார். எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் நகைவேழம்பரைப் பின்பற்றி நடப்பதனால் உண்டான பயம் வேறு அவர் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது. அக நகர எல்லையைக் கடந்து காவிரி கடலோடு கடக்குமிடத்தை நெருங்கி வந்திருந்தார்கள் அவர்கள். மக்கள் பழக்கமே இல்லாத இரவு நேரமாகையினால் பகலில் இயற்கையழகு பொலியும் அந்த இடம் இப்போது பயப்படுவதற்கு உரியதாயிருந்தது. நதிக்கரைப் படுகையில் ஆள் நடந்தால் தோற்றம் மறைந்து போகிற உயரத்துக்கு நாணற்காடு புதர் மண்டியிருந்தது. பஞ்சு பூத்ததுபோல் வெண்மையான நீண்ட நாணற் பூங்கதிர்கள் இருளில் மங்கலாகத் தெரிந்தன. நாணற் புதரில் காற்று ஊடுருவுவதால் உண்டான சரசரப்பு ஓசையும், நீரலைகளின் சப்தமும், விட்டு விட்டு ஒரே சுருதியில் கேட்கிற தவளைக் குரலும், சூழ்நிலையின் பயங்கரத்துக்குத் துணை கூட்டின. ஊளையிட்டுக் கொண்டே நரிகள் புதரில் விழுந் தடித்துக் கொண்டு ஓடுகிற ஓசையும், நதி நீருடன் கரைசரிந்து தணியுமிடத்தில் நீர் நாய்கள் துள்ளும் சப்தமும், அவ்வப்போது எழுந்து அந்தப் பக்கமாக நடப்பவர்களுக்கு அச்சமூட்டிக் கொண்டிருந்தன.
அந்த நாணற் காட்டின் நடுவே பெருநிதிச் செல்வரை அழைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர்.