உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

307

சிறிது நேரத்தில் பண்டசாலையிலிருந்து எல்லாரும் மாளிகைக்குப் புறப்பட்டார்கள். தந்தையாரோடு தேரில் ஏறிக் கொண்டிருந்த நகைவேழம்பர் தேர் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன்பு தேரிலிருந்து கீழே இறங்கி விட்டதைச் சுரமஞ்சரி மற்றொரு தேரிலிருந்து பார்த்தாள்.

“ஏன் இறங்கி விட்டீர்கள்? நீங்கள் எங்களோடு மாளிகைக்கு வரவில்லையா?” என்று தந்தையார் கேட்டதற்கு “நான் துறைமுகத்துக்குள் சென்று வரவேண்டும். அங்கே போய் இன்று காலையில் துறைசேர்ந்த கப்பல்கள் எவை எவை என்று அறிந்து, அவற்றில் உங்கள் தவப் புதல்வியாருக்கு உதவி செய்த கப்பல் எது என்றும் தெரிந்துகொண்டு அப்புறம் மாளிகைக்கு வருகிறேன். வரும்போது சுரமஞ்சரி தேவிக்கு உதவி செய்த கப்பலின் தலைவனையும் கண்டுபிடித்து என்னோடு அழைத்து வருகிறேன். இன்றே அவனுக்கு நம் நன்றியைத் தெரிவித்துப் பரிசும் அளித்துவிடலாம்” என்று நகைவேழம்பர் கூறிச் செல்வதைக் கேட்டுத் திகைத்தாள் சுரமஞ்சரி.

‘ஐயா, நகைவேழம்பரே! அதற்கு இப்போது அவசரம் ஒன்றுமில்லை என்று சொல்லி அவரைத் தடுக்கவும் அந்தச் சமயத்தில் அவளுக்குத் துணிவில்லை. அதற்குள் தேர்களும் மாளிகைக்குப் புறப்பட்டுவிட்டன. நகைவேழம்பர் துறைமுகத்துக்குள் நுழைவதையும் விரைந்து செல்லும் தேரிலிருந்தே அவள் பார்த்தாள். கலக்கம் கொண்டாள். சீனத்துக் கப்பல் தலைவனை நகைவேழம்பர் சந்தித்து மாளிகைக்கு அழைத்து வந்து விட்டால், தன்னோடு ஒர் இளைஞரும் கப்பலில் வந்ததை அவர் கூறுவார். அதையே அவர் வேறுவிதமாகப் புரிந்து, கொண்டிருக்கும் பட்சத்தில் ‘உங்கள் பெண்ணும் உங்கள் பெண்ணின் காதலர்போல் தோன்றிய ஓர் இளைஞரும் கப்பல் கரப்புத் தீவிலிருந்து இன்று காலை என் கப்பலில் இடம் பெற்று வந்தார்கள்’ என்று தந்தையிடம் வந்து கூறினாலும் கூறுவாரே! அப்படிக் கூறிவிட்டால் நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/13&oldid=1149173" இலிருந்து மீள்விக்கப்பட்டது