பக்கம்:மணி பல்லவம் 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

மணிபல்லவம்

நிமிர்ந்தபோது, அவள் நின்ற இடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு தவச்சாலையை நோக்கி விரைவாக நடந்து போய்க் கொண்டிருந்தான் அவன். மாலை வெயிலில் அவனுடைய பவழச் செஞ்சுடர் மேனி அக்கினியே நடந்து போவதுபோல் மின்னியது.


20. செல்வச் சிறை

பொழுது புலர்ந்து கொண்டிருந்த அந்த வைகறை நேரத்திலே இருகாமத்திணை ஏரியின் கரையும் காமவேள்; கோயிலும் தனிமையின் அழகில் அற்புதமாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. கிழக்கு வானத்தில் வைகறைப் பெண் செம்மண் கோலம் இட்டுக் கொண்டிருந்தாற்போல ஒரு காட்சி. காமவேள் கோயில் விமானத்திற் பொற் கலசங்கள் மின்னிக் கொண்டிருந்தன. விடிகாலைக் காற்றினால் ஏரி நீர்ப்பரப்பிலே பட்டுத் துணியில் மடிப்புக்கள் விழுவது போலச் சிற்றலைகள் புரண்டன. நீர்ப் பரப்பின் தெளிவு கண்ணாடி போலிருந்தது. அந்தத் தெளிவுக்கு மாற்றாகச் செங்குமுதப் பூக்கள்.

மேகக்காடு போல நீராடிய கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு-நின்றாள் சுரமஞ்சரி. தோழி வசந்தமாலையும் அப்போதுதான் நீராடி முடித்துவிட்டுக் கரையேறிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கிக் குறும்புநகை குலவக் கேட்டாள் சுரமஞ்சரி.

“நீ யாரை நினைத்துக் கொண்டு நீராடினாய் வசந்தமாலை?”

“நான் ஆண்பிள்ளை யாரையும் நினைத்துக் கொள்ளவில்லையம்மா. விடிந்ததும் விடியாததுமாக இந்தக் குளிரில் என்னை நீராடுவதற்காக இங்கே இழுத்து வந்த உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/138&oldid=1150021" இலிருந்து மீள்விக்கப்பட்டது