ஞானப்பசி
மனத்தின் எல்லையில் அறிவு பெருகப் பெருக அது வரையில் அந்த இடத்தை நிறைத்துக் கொண்டிருந்த அறியாமையின் அளவு நன்றாகத் தெரிகிறது. இந்தக் கதையின் நாயகன் உடலின் வனப்பைப் போலவே மனத்தின் வனப்பையும் வளர்க்க விரும்பி அறிவுப் பசியோடு புறப்பட்டு அந்தப் பசி திரும் இடத்தை அடைந்த சில திங்களிலேயே அவனுடைய அக உணர்ச்சிகள் மலர்ந்து மணம் பரப்புகின்றன. வில்லினும், மல்லினும் போர் தொடுத்து வென்றும் வீரமுரசறைந்தும் பெறும் புகழ்போல் சொல்லினும், சுவையினும் அடைகிற அறிவின்பம் அவனுக்கு மிக்கதாகத் தோன்றுகிறது. அறிவு என்பதே பேரின்பமாக இருக்கிறது. ‘நல்லதின் நலனும் தீயதின் தீமையும் உள்ளவாறு உணர்தல்’ என்று அறிவுக்கு வரையறை கூறியிருக்கிறார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு பொருளிலும் அதனதன் மெய்யைத் தெரிவதில் ஓரின்பம் இருக்கத்தான் செய்யதது என்பதை இந்தக் கதையின் நாயகனான இளங்குமரன் பரிபூரணமாக உணர்கிறான். வீரமும், உடல் வலிமையும் கைகளால் முயன்று வெல்லும் வழியை அவனுக்குக் கற்பித்திருக்கின்றன. ஞானமோ, மனத்தினாலேயே உலகத்தை வெல்ல வழி கூறுகின்றது. வயிற்றுப் பசிபோல் உண்டதன் பின்னும் தீர்தலின்றி உண்ண உண்ண மிகுவதாக இருக்கிறது ஞானப் பசி. ‘இன்னும் உண்ண வேண்டும், இதுவரை உண்டது போதாது’ என்று மேலும் மேலும் மனத்தைத் துாண்டும் புதிய ஞானப் பசியை அவன் மிகவும் விரும்புகிறான். அந்தப் பசி ஏற்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்று அவன் தணியாத தாகத்துடன் பெருவேட்கை பெறுகிறான்.