பக்கம்:மணி பல்லவம் 2.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

மணிபல்லவம்

எனவே அவனுடைய பெருவாழ்வில் இந்தப் பருவம் அறிவு மயமாக மலர்கிறது: வளர்கிறது; மனம் விரிக்கிறது. மனிதர்களுக்கு உடலின் செழுமையாலும், தோலின் மினுமினுப்பாலும் அவயவங்களின் அழகாலும் வருகின்றன. கவர்ச்சி நிலையற்றது; ஆனால் அறிவினால் வருகிற அழகு நிலையானது. உயர்ந்தது; இணையற்றது. ஏற்கெனவே பேரழகனான இளங்குமரன் இப்போது அறிவின் அழியா அழகையும் எய்தப் போகிறான். அந்த அறிவழகின் மலர்ச்சியில் அவன் முழுமையான மனிதனாக எழுச்சி பெற்று நிற்கும் நிலையை அடையப் போகிறான். அந்தப் புதிய எழுச்சியின் பயனாக அவன் வாழ்வில் மலரும் இரண்டாவது பருவம் இது.

1. முதல் நாள் பாடம்

நிலத்தைப் போல் தன்னை அடைந்தவர்களைத் தாங்கும் பொறுமையும், மலையைப் போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ளக் குறையாத வளமும், மலரைப்போல் மென்மையும், துலாக்கோலைப் போல் நடுநிலை பிறழாத தன்மையும் உடையவர்கள்தாம் பிறருக்குக் கற்பிக்கும் ஆசிரியராகத் தகுதியுடையவர்கள் என்று இளங்குமரன் பலமுறை பலரிடம் கேட்டிருக்கிறான். ஆனால் அத்தகைய முழுமையான ஆசிரியர் பெருந்தகை ஒருவரை நேற்றுவரை அவன் சந்திக்க நேர்ந்ததில்லை. நீலநாக மறவர் அவனுக்கும் போர்த்துறைக் கலைகளைக் கற்பித்த ஆசிரியரானாலும் அவரிடம் நாங்கூர் அடிகளிடமிருந்ததைப் போன்ற மென்மையையும் குழந்தையுள்ளத்தையும் அவன் கண்டதில்லை. நீலதாக மறவர் வீரத்தின் ஆசிரியராக அவன் கண்களுக்குத் தோன்றினாரேயன்றி ஞானாசிரியராகத் தோன்றியதில்லை. கல்லைப் போல் உடம்பும், மனமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/4&oldid=1146216" இலிருந்து மீள்விக்கப்பட்டது