உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

299

இறுகிப் போன மனிதரான அவரிடம் நாங்கூர் அடிகளின் மென்மையை எதிர்பார்க்க இயலாது என்பதையும் அவன் இன்று தன் மனத்துள் ஒப்பிட்டுப் பார்த்து உணர்ந்தான். அப்படிப்பட்ட இரும்பு மனிதரும் நாங்கூர் அடிகளின் மாணவர்தாம் என்பதை நினைக்கும்போது அவனுக்கு வியப்பாயிருந்தது.

அருட்செல்வ முனிவர் பெரிய ஞானியாயிருந்தாலும் அவரிடமே வளர்ந்ததனால் அவர் மேல் அவனுக்கு அன்பும் பாசமும்தான் உண்டாயின. அவரிடமிருந்து அன்புக்காகவும், பாசத்துக்காகவும் அவன் மனம் ஏங்கியதே அல்லாமல் ஞானத்துக்காக ஏங்கியதே இல்லை! ஞானத்துக்காக ஏங்குகின்ற மனப் பக்குவம் அப்போது அவனுக்கு இல்லை. ஆயிரம் கதிர் விரிக்கும் ஞாயிற்றொளி அலை கடற்கோடியில் மேலெழுந்து விரிவதுபோல் நாங்கூர் அடிகளின் முகத்தில் கண்டு கனிந்த ஞான மலர்ச்சியை இதற்குமுன் தான் யாரிடமும் கண்டதாக நினைவே இல்லை இளங்குமரனுக்கு. “அறியாமையையும் ஆணவத்தையும் தவிர என்னோடு வேறெவற்றையும் நான் கொண்டு வரவில்லையே, ஐயா!” என்று அந்தப் பேரறிஞருக்கு முன் தலைவணங்கி ஒடுங்கித் தளர்ந்து தான் கூறியபோது அவர் தனக்கு மறுமொழியாகக் கூறிய வார்த்தைகளை நினைத்து நினைத்து மகிழ்ந்தான் இளங்குமரன். நம்பிக்கையளிக்கும் அந்தச் சொற்கள் அவன் மனத்திலேயே தங்கி ஒலித்துக் கொண்டிருந்தன.

“உன்னையே எனக்குக் கொடு; என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக இரு அதுவே போதும்.” இந்தச் சொற்களை எவ்வளவு குழைவாக, எவ்வளவு தணிவாக வெளியிட்டார் அந்த ஞானச் செல்வர்! அவர் வாய் திறந்து நிதானமாகப் பேசியபோது இந்தச் சொற்களில்தான் எத்தனை நிறைவுடைமை!

உலகத்தையெல்லாம் விலை கொள்ளும் பெரிய ஞானமும், கள்ளங் கபடமில்லாத பச்சைக் குழந்தை போன்ற மனமும், பழுத்த சொற்களாகத் தேர்ந்து முத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/5&oldid=1148737" இலிருந்து மீள்விக்கப்பட்டது