உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

329

கோலத்துக்குரிய சீவர ஆடையும், நடந்து வருகிறபோதே தன்னைச் சுற்றிலும் தூய்மை சூழச் செய்கிற தனித் தன்மையுமாக அந்தப் பெண்ணைக் கண்டதுமே இளங்குமரனின் மனம் வணங்கியது. பேதமை மாறாத இளம் வயது. நிலவைக் கறை துடைத்தாற் போன்ற தூய முகம். அதில் உணர்ச்சியலைகள் படியாது அமைதி திகழும் கண்கள். சிவந்த இதழ்களில் நிறைந்த சாந்தம். சாந்தத்திலிருந்து தனியே பிரிக்க முடியாததொரு புன்னகை. தோற்றம் நிறையப் பாதாதிகேச பரியந்தம். வார்த்தைகளாற் சொல்ல முடியாததொரு பேரமைதியோடு அந்தத் துறவி நின்றாள். அவளுடைய வெண்கமலப் பூங்கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய கோலமும் நின்ற நிலையும் மின்னலிற் செய்து நிறுத்திய சிற்பமோ எனக் காண்பார் கண்களைத் தயங்கச் செய்தன. பெரிதாய், அழகாய், அளவாய்த் தொடுத்துத் தொங்க விட்டிருந்த முல்லை மாலை சரிந்து நழுவுவதுபோல் தரையில் மெல்ல அமர்ந்தாள் விசாகை.

“இளங்குமரா! இந்தப் பெண்ணின் பெயர் விசாகை. உன்னைப் போலவே என்னிடம் கற்றவள். இவள் இந்தக் கோலம் பூண நேர்ந்தது ஒரு விந்தையான வரலாறு. தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது. மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான் என்று சிறிது நேரத்துக்கு முன் உன்னிடம் கூறியது உனக்கு நினைவிருக்கிறதல்லவா? விதி வகுத்த வாழ்வை மீறித் தான் வகுத்த வாழ்வுக்கு விதி அமைத்துக் கொண்ட பெண் இவள். இத்தனை இளம் வயதில் இவள் மனத்துக்குக் கிடைத்திருக்கிற வைராக்கிய முதிர்ச்சி அற்புதமானது. பிறர் வியக்கத்தக்கது” என்று நாங்கூர் அடிகள் இளங்குமரனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

“விந்தை! விந்தை! என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்கிற அளவுக்கு என் வாழ்வில் அப்படி என்ன இருக்கிறது, தாத்தா? துர்பாக்கியங்களும் ஏமாற்றங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/35&oldid=1149325" இலிருந்து மீள்விக்கப்பட்டது