342
மணிபல்லவம்
கரையில் குதித்துத் தன் வீட்டுக்குப் போய்க் கிழப் பெற்றோரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்ய வேண்டும் போல் ஆசையாயிருந்தது மணிமார்பனுக்கு.
தனக்குச் சுரமஞ்சரி அளித்திருந்த மணிமாலையை நாளங்காடிச் சதுக்கத்திலுள்ள பொன் வணிகர் எவரிடமாவது விற்றுப் பொற்கழஞ்சுகளாக மாற்றிக் கொண்டு மதுரைக்குப் புறப்படலாமென எண்ணினான் அவன். நீலநாகர் படைக்கலச் சாலைக்குப் போய்ச் சுரமஞ்சரி கூறியனுப்பியிருந்த செய்தியை அதற்குரியவரிடம் கூறி விட்டுத் திரும்பி வந்து மணிமாலையை விற்கலாம் என்றால் நாளங்காடிக் கடைகளை அதற்குள் அடைத்து விடுவார்கள். இரவு நேரத்தில் அல்லங்காடிக் கடைகள் திறந்திருக்குமாயினும், இவ்வளவு மதிப்பீடு உள்ள அரிய மணிமாலையை விலை பேசி விற்கிற அளவுக்குப் பெரிய கடைகள் அங்கு இல்லை. நாளங்காடி நாற்சந்திக்கு வந்தவுடன் பூதசதுக்கத்துக்கு எதிரே தயங்கி நின்றான் மணிமார்பன். இந்திர விழாவின் இரண்டாம் நாள் தான் அந்த இடத்தில் சுரமஞ்சரி என்னும் செல்வக் குடும்பத்துப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்ததும், அவளுக்காக இளங்குமரனை நிற்கச் செய்து ஓவியம் வரைந்ததும், அதன் காரணமாகப் பின்பு தனக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் அவன் நினைவில் படர்ந்தன. அவன் நினைப்பிலும் நோக்கிலும் காவிரிப் பூம்பட்டின நகரம் இப்போதுகூட அழகும் பெருமையும் நிறைந்ததாகத்தான் தோன்றியது. ஆனால் நகைவேழம்பர் என்னும் குரூரமான மனிதரையும், அவரை வைத்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரையும் நினைத்த போதுதான் காவிரிப்பூம்பட்டினம் பயங்கரமும் சூழ்ச்சிகளும் மிகுந்த நகரமோ என்ற அச்சம் அவன் மனத்தில் எழுந்தது.
பூம்புகாரின் மாபெரும் துறைமுகத்துக்கு, நெடுந்தொலைவிலுள்ள நாடுகளிலிருந்தெல்லாம் கப்பல்கள்