நா. பார்த்தசாரதி
301
சிரித்தது. வாகை மரக் கிளைகளில் காகங்கள் கரைந்தன. கீழே நடந்து செல்லும் வழியில் மண் ஈர மணம் கமழ்ந்தது.
சிறிது தொலைவு அமைதியாக நடந்து சென்றபின் “உன்னுடைய மனமும் இப்போது இந்த நேரத்தைப் போல் இருக்கிறதல்லவா! இருளை அழித்துப் போக்கிவிடுவதற்கும் ஒளியை வளர்த்துப் பெருக்கிக் கொள்வதற்கும் தானே தவிக்கிறாய் நீ” என்று இளங்குமரனைக் கேட்டார் அடிகள். இளங்குமரன் சிரித்தவாறே பதில் கூறினான்.
“ஆனால் ஒளியின் அருகே ஒளியைப் பின்பற்றித்தான் நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் ஐயா!”
“நல்லது தம்பீ! முதலில் நீ ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். என்னிடமே என்னைப் பற்றி அடிக்கடி நீ புகழ்ந்து சொல்லக்கூடாது. உலகத்தில் நல்ல அறிவாளிகள் எல்லாரும் முதலில் தாங்கள் அத்தகைய பேரறிவைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் என்ற நினைவே இன்றிக் குழந்தைகள் போல் இருக்கிறார்கள். பாமரர்கள் அவர்களிடமே அவர்களைப் புகழ்ந்து சொல்லிச் சொல்லி இழக்கக் கூடாத அந்தக் குழந்தைத் தன்மையை அவர்கள் இழக்கும்படி செய்துவிடுகிறார்கள். புகழைக் கேட்டுக் கேட்டு மனம் மூப்படைந்து விடுகிறது. அதனால் நான் அதை விரும்புவதே இல்லை. என்னுடைய ஞானத்துக்காக எல்லாரும் என்னைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டுமென்று நான் நினைப்பதேயில்லை. நான் வெறும் வாய்க்கால்தான்; ஏரியிலிருந்து வாய்க்கால் வழியாகப் பாய்ந்து நிலத்துக்கு நீர் போவதில்லையா? ஞானம் எங்கோ நிரம்பியிருக்கிறது. அதைப் பாய்ச்ச வேண்டிய விளைநிலம் வேறெங்கோ கிடக்கிறது. அந்த விளை நிலத்தைத் தேடி அதில் போய்ப் பாயும்படி செய்யும் வாய்க்காலுக்குத் தனிப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? எங்கிருந்தோ வருகிற நீர், எங்கோ பாயப் போகிற நீர்! வாய்க்காலுக்கு ஏது பெருமை?”