உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

385

“அழுகிறேனா? இல்லையே?” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனிடம் தன்னுணர்வை மறைக்க முயன்றாள் அவள். “இல்லையாவது என்னிடம் ஏன் மறைக்கிறாய்? நீ அழுவதன் காரணம் எனக்குத் தெரியும்?” என்று சொல்லியபடி ஆதரவாகத் தங்கையின் அருகில் அமர்ந்தான் அவன். முல்லை தலைகுனிந்தாள். அவளுடைய கண்ணீரின் கடைசி இரண்டு துளிகள் காவிரிக் காலில் விழுந்து கலந்தன.

“கலக்கமடையாதே, முல்லை! உன்னை நானே திருநாங்கூருக்கு அழைத்துப் போகிறேன். நாம் இருவரும் இளங்குமரனைச் சந்திக்கலாம்” என்று தமையனின் குரல் அவள் காதருகே ஆறுதலாக ஒலித்தது.


13. வேங்கை சீறியது

ந்தையார் உடன் அனுப்பியிருந்த ஊழியன் நிழலைப் போல் விடாமல் அருகிலேயே இருந்ததனால் நெய்தலங் கானலின் அழகிய கடற்கரையில் சுரமஞ்சரியும், வசந்தமாலையும் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதற்காகத் தவித்துக் கொண்டிருந்தவற்றில் எதையும் பேச முடியவில்லை.

சுரமஞ்சரி இளங்குமரனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். பெண்ணின் மனம் சந்தனப் பேழையைப் போன்றது. சந்தனப் பேழையில் சந்தனம் இருந்தாலும் மணக்கும். சந்தனம் இல்லாவிட்டாலும் அது இருந்ததற்கு அடையாளமான மணம் கமழும். மனத்துக்குப் பிரியமானவர் அருகில் இருந்தாலும் விலகி இருந்தாலும் அவரைப் பற்றிய இனிய நினைவுகளை எண்ணாமலிருக்கப் பெண்ணால் முடிவதில்லை. சுரமஞ்சரியின் மனத்திலும் சந்தனப் பேழையைப் போல் இளங்குமரனின் நினைவுகள் மணந்தன.

ம-25


ம-25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/91&oldid=1149706" இலிருந்து மீள்விக்கப்பட்டது