உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

387

திருந்தன. இந்தப் பிறவியில் இன்பத்தையும் மறுமையில் போக பூமியையும் தரக்கூடிய புண்ணியப் பயன் வாய்ந்த இந்த ஏரிகளுக்குப் பூம்புகார் மக்கள் இருகாமத் திணை ஏரி என்று பெயர் வழங்கினார்கள். மனம் விரும்பிய நாயகனை அடைவதற்கும், அடைந்த நாயகனைப் பிரியாமல் இருப்பதற்கும், இந்த ஏரிகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தை வணங்கி வலங்கொண்டு வழிபடுவது பூம்புகார்ப் பெண்களின் வழக்கமாயிருந்தது. இதனால் இருகாமத்திணை ஏரிகளின் கரையிலும் காமவேள் கோட்டத்திலும் இளம் பெண்களின் பெருங்கூட்டத்தை எப்போதும் காணலாம். இரண்டு பிறவிகளிலும் நுகர்வதற்குரிய ஆசைகளை இணைத்தலால் இருகாமத்து இணை ஏரி என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த இடத்துக்கு இதற்கு முன் சுரமஞ்சளி பல முறை சென்றிருக்கிறாள். ஆனால், தன் மனத்துக்குள் ஒரு விருப்பத்தையோ, அந்தரங்கமான குறிக்கோளையோ அமைத்துக் கொண்டு அதற்கு வேண்டுதலாக இதுவரை அவள் சென்றதில்லை. இப்போது அப்படிப் போக வேண்டிய அவசியம் வந்திருப்பதை அவள் உணர்ந்தாள். ‘நீராடியும், வலம் வந்தும், வழிபட்டும், இன்னொருவருடைய மனத்தை நம் பக்கம் இழுத்து விடுவதற்கு இயலுமோ, இயலாதோ, அப்படிச் செய்கின்ற சடங்குகளால் செய்யப்படுகிற செயலின் மேல் நமக்குள்ள பக்தியும் சிரத்தையும் வளர்ந்து விடுகிறது. அதற்காகவாவது எல்லாரையும் போல நானும் அவற்றை விட்டு விடாமல் செய்ய வேண்டும்’ என்று மனத்துக்குள் முடிவு செய்து கொண்டாள் சுரமஞ்சரி.

“வந்து வெகு நேரமாகிவிட்டதே? புறப்படலாமா?” என்று வசந்தமாலை மாளிகைக்குத் திரும்புவதை நினைவூட்டினாள்.

“இப்போது திரும்பலாம்; ஆனால் நாளைக்கு மறுபடியும் நாம் இந்தப் பக்கமாக வரவேண்டிய காரியமிருக்கிறது” என்று கூறிக்கொண்டே சுரமஞ்சரி எழுந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/93&oldid=1149708" இலிருந்து மீள்விக்கப்பட்டது