உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

727


இந்த அவசரமான தீர்மானத்திற்கு வந்தவுடனே பெருமாளிகையில் தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான காவலன் ஒருவனைக் கூப்பிட்டு, “நீ இப்போது உடனே புறப்பட்டுப் போய் மருவூர்ப் பாக்கத்து அலைவாய்க் கரையில் உள்ள யவனப்பாடியில் இருக்கும் நாகர்குலத்து மறவனான அருவாளனை இங்கே அழைத்துக் கொண்டு வரவேண்டும். இன்று கதிரவன் மறையும் போதுக்குள் நீ அவனோடு திரும்பி இங்கே வர முடியாவிட்டால் உன்னால் எனக்கு ஒரு பயனும் இல்லை. சம்பாபதி வனம், சக்கரவாளத்துக் காடுகள், காவிரிக்கரை நாணற் புதர் எங்கெல்லாம் தேட முடியுமோ அங்கெல்லாம் தேடி அருவாளனைக் கண்டு பிடித்து இங்கே திரும்பி வரும்போது அவனோடு வா. அவன் இல்லாவிட்டால் வராதே.” என்று உறுதியான கட்டளையாகச் சொல்லி அனுப்பினார் பெருநிதிச் செல்வர். அவருக்கு அந்தரங்கமானவனாகிய அந்த காவலன் உடனே அதைச் செய்வதற்குப் புறப்பட்டான்.

அவனை அனுப்பிவிட்டுச் சிந்தனைக்குரிய பல சந்தேகங்களை மாற்றி மாற்றி நினைத்துப் பாதி பயமும் பாதி அவநம்பிக்கைகளுமாகக் குழம்பினார் அவர். நிம்மதி சிறிதும் இல்லாமல் என்னென்னவோ எண்ணிப் பரபரப்படைந்திருந்தன அவருடைய உணர்வுகள்.

என் பயம் வீணானது. காரணமற்றது. பொய்யானது. இன்னும் ஆயிரம் நகைவேழம்பர்கள் எனக்கு எதிராக மாறினாலும் அந்தக் காலாந்தகன் மறுபடி உயிரோடு பிழைத்து வந்தாலும் என்னை என்ன செய்து விட முடியும்? செத்தவர்கள் பேயாக மாறி வேண்டுமானாலும் வரலாம். பிழைத்து வர முடியாது. இது தெரிந்தும் நான் ஏன் பதறுகிறேன்? என் உடல் எதற்காக நடுங்குகிறது? என்று எண்ணி எண்ணி மாய்ந்தபடியே வெளியே சென்றிருக்கும் காவலன், நாகர் குலத்து அருவாளனை அழைத்து வருவதையே எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர். அப்போது வேறு எந்த வேலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/118&oldid=1231545" இலிருந்து மீள்விக்கப்பட்டது