உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

734

மணிபல்லவம்

மூலையில் கிடைத்தததாகச் சொல்லி இவரிடம் கொடுத்துவிடுகிறேன். அப்படிக் கொடுப்பதற்கு முன்னும் கொடுத்த பின்னும் இவர் அடைகிற உணர்ச்சிகளை நாம் இருவருமே கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்று கூறினாள். தந்தையின் வார்த்தைகளுக்கு மறுமொழி கூறாமல் அலட்சியம் செய்ததைப் போலவே தோழியின் இந்தத் தந்திர முயற்சியையும் அவள் அலட்சியம் செய்தாள். தலைவியின் அலட்சியத்தைத் தனக்குச் சம்மதமாகப் புரிந்துகொண்ட தோழி தன் திட்டப்படியே செய்தாள். சிறிது நேரம் பெருநிதிச் செல்வரின் பொறுமையைச் சோதித்தபின், “ஐயா! எங்களுடைய மாடத்தில் உங்கள் ஊன்றுகோல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கீழே இந்தப் பொருள் கிடந்தது. இதை உங்களிடம் கொடுத்துவிட வேண்டுமென்று பத்திரமாக நான் எடுத்து வைத்திருந்தேன்” என்று அந்த ஐம்படைத் தாலியை அவரிடம் பயபக்தியோடு கொடுத்துவிட்டாள் வசந்தமாலை. அப்போதும் சுரமஞ்சரி ஒன்றும் பேசாமல் தன் தந்தையையும், வசந்தமாலையையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டுதான் நின்றாள். மனத்திற்கு விருப்பமான கனவு கலைக்கப்பட்டு நனவுலகத்தின் துன்பமயமான அனுபவங்களை அந்த நேரத்திலே தான் அடைய நேர்ந்ததை வெறுத்தாள் அவள்.

பெருநிதிச் செல்வரோ அவர்கள் இரண்டு பேர்களும் தன் முகத்திலிருந்து தெரிந்து கொள்வதற்குக் காத்திருந்த உணர்ச்சிகளைச் சிறிதளவும் தன்னிடம் தெரியவிடாமல் சர்வசாதாரணமாக அந்த ஐம்படைத் தாலியைத் தன் கையில் வாங்கிக்கொண்டு நின்றார். வாங்கிக்கொண்ட விதத்திலும் வாங்கிக் கையில் வைத்துக்கொண்ட விதத்திலும் எந்த அவசியமும் தெரியாத அலட்சிய பாவம் திகழ நின்றுகொண்டு ஓரிரு கணங்களுக்கு அந்தப் பொருளைப் பற்றிய நினைவையே அவர்களிடமிருந்து மறைப்பதற்காக, ‘இது என்ன? இந்தப் பொற் பேழை நிறையக் கொண்டு வந்து இங்கே வைத்த பணியாரங்களும் உணவும் அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/125&oldid=1231553" இலிருந்து மீள்விக்கப்பட்டது