752
மணிபல்லவம்
இந்தச் சொற்களைக் கேட்டதும் பலிபீடத்தில் சாய்ந்து கொண்டிருந்த நகைவேழம்பர் தலையை நிமிர்த்திக் கண்ணில் வெறியும், தவிப்பும் மாறி மாறித் தெரிய, “அப்படியும் சொன்னானா அந்தப் பாவி? தெரிந்துகொள், அருவாளா ! உனக்கும் ஒருநாள் அவனிடம் இந்தக் கதிதான். அந்த பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வனுக்கு நன்றிக் கடனும், சோற்றுக் கடனும் பட்டிருப்பதாக மயங்கி வீணில் அடிமையாகப் போய்விடாதே. ஏழையாயிருந்து பட்டினி கிடப்பது கூடச் சுகம். அடிமையாக இருந்து வயிறார உண்பதுகூட நோய் என்று இந்த மரணாவஸ்தை நிறைந்த கடைசிக் கணத்தில் என் மனத்தின் குருட்டுத்தனம் நீங்கி எனக்கு ஒரு ஞானம் வருகிறது. இனிமேல் வந்து பயன் என்ன! நான் அடிமையாயிருந்து கொண்டே சுதந்திரமாய் இருப் பதாய் எண்ணிக் கொண்டு தப்பான நம்பிக்கையோடு கொடிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். எவ்வளவு சுதந்திரமாக இருந்தாலும், எல்லாரும் என்றைக்காவது ஒருநாள் மரணத்துக்கு அடிமையாகித் தீர வேண்டியதுதான் போலிருக்கிறதென்று இப்போது புதிதாகப் புரிந்து கொண்டவன் போலக் கடைசியாக இந்தப் பலிபீடத்தில் வந்து வீழ்ந்துவிட்டேன் பார். என் வாழ்வு இவ்வளவு தான். இனிமேல் எனக்கு என்ன இருக்கிறது? ஆனால்.
சிறிது நேரம் தயங்கிவிட்டு அவர் மேலும் பேசினார்: “இனிமேல் ஒன்றுமில்லை என்றும் கை விடுவது முடியாது. கடைசியாக நான் செய்வதற்கு இன்னும் ஏதோ இருக்கிறது. பெருமாளிகையில் செத்துப் போனால் கூட நான் பேயாயிருந்து பின்னால் பயமுறுத்துவேனோ என்று அஞ்சிப் பெருநிதிச் செல்வன் என்னை இங்கே தூக்கிக் கொண்டு வந்து கொல்லச் சொன்னான் அல்லவா? நான் பேயாயிருந்து அந்தக் கொடியவனுக்கு கெடுதல் செய்ய முடியுமானால் அதைச் செய்யத்தக்க விதத்தில் சாவதற்கு இப்போதும் என்னால் முடியும். அப்பனே! இப்படியே என்னைத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் போட்டுவிடு. நான்