உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

755

மட்டும் அல்ல! யாருடைய மாளிகையிலோ நிதியறையை நிரப்புவதற்காக நான் என்னுடைய கணக்கில் பாவங்களை நிறைத்துக் கொண்டு கெட்டுப் போய்விட்டேன்.

நான் இப்படிச் சுகமாக நலிந்து மந்தமாக மெல்ல மெல்லச் சாவது எனக்கே பிடிக்கவில்லை. யாராவது நாலைந்து பேராகச் சேர்ந்து கொண்டு கணம் கண மாகத் துடிக்கத் துடிக்கச் சித்திரவதை செய்து என்னைக் கொல்ல வேண்டும் போல் இப்போது எனக்கே ஆசையாக இருக்கிறது. மந்தமாக நோயாளியைப் போலச் சாவது சோம்பேறித்தனமான சாவு. என்னைப் போல் அப்படி வாழ்ந்தவன் சோம்பேறித்தனமாக இப்படியா சாவது? நீயே சொல் அருவாளா? என்னைச் சித்திர வதை செய்தாலும் என்னுடைய வாய் அலறாது! கண்களில் நீர் நெகிழாது. அப்படி உடம்பையும் மனத்தையும் கல்லாகவும் இரும்பாகவும் நான் பழக்கியிருக்கிறேன். நீயும் உங்கள் உலகமும் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நான் இப்படி வாழ்ந்தது கூட ஒருவகைத் துறவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் என்னைப் போலவே இவற்றைத் துறவாக ஒப்புக்கொள்கிறவள் ஒருத்தி இதே சக்கரவாளத்துக் காட்டில் இன்னும் சிறிது தொலைவிலுள்ள வன்னி மன்றத்தில் இருக்கிறாள். சாவதற்கு முன் அவளை நான் ஒருமுறை பார்த்துவிட்டுச் சாக வேண்டும். நீயும் உன் தோழனும் போய் எனக்காக அவளை இங்கே அழைத்து வர முடியுமா? அவள் பெயர் பைரவி. கபாலிகர்களுடைய வன்னி மன்றத்திலே போய் யாரிடம் அவள் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் தெரியும். எனக்கு ஒரே ஓர் ஆசை. நிராசையோடு நான் சாக விரும்ப வில்லை. என்னை இக்கதிக்கு ஆளாக்கியவனைப் பற்றிய எல்லா இரகசியங்களும் எனக்குத் தெரிந்திருப்பது. போலவே அந்தக் கபாலிகைக்கும் தெரியும். அந்தக் கொடும்பாவியைப் பழிவாங்கும் பொறுப்பை இன்று. அவளிடம் நான் ஒப்படைக்கப் போகிறேன். அந்தப் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்டுவிட்டால் பின்பு நான் நிம்மதியாகச் சாகலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/146&oldid=1190775" இலிருந்து மீள்விக்கப்பட்டது