பக்கம்:மணி பல்லவம் 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

666

மணிபல்லவம்

இங்கிருந்து போனால் நம்மைப் பிடித்த தொல்லை முக்கால் பங்கு தீர்ந்தது போலத்தான்.”

தன்னுடைய தலைவியின் குரலில் இருந்த கண்டிப்பு வசந்தமாலையையே வியக்கச் செய்தது, ஆனால் அவள் தன் வியப்பை மறைத்துக்கொண்ட குரலில் பேசினாள்; “அதற்கில்லை, அம்மா! செல்வக் குவியலின் மேல் நிமிர்ந்து நிற்கும் உங்கள் தந்தை, கேவலம் இந்தச் சின்னஞ்சிறு பொன் ஆரத்தை ஒளித்துப் பாதுகாப்பதன் காரணம் விளங்கவில்லை என்று சற்று முன்னால் நீங்களே மருண்டீர்களே ! உங்களுடைய அந்த மருட்சியைப் பார்த்துத்தான் இதன் காரணம் விளங்குவதற்கு நாம் ஏதாவது தந்திரம் செய்யலாமா என்று கேட்டேன்.”

“அவசியமில்லை! தந்திரத்தால் வாழ்பவர்களைப் பார்த்து வியந்துகொண்டே தாமும் தந்திரத்தில் இறங்குவது நியாயமாகாது. இந்த மாளிகையின் வாழ்க்கையைப் பார்த்துச் சில சமயங்களில் நான் பயப்படுகிறேன். சில சமயங்களில் நான் வியக்கிறேன். வேறு சில சமயங்களில் நான் எனக்குள்ளேயே சிரிக்கிறேன். அதுவும் முடியாத போது புத்தரைப்போல் மனத்துக்குள்ளேயே அழுகிறேன். இதற்கெல்லாம் காரணம் தேடி அலைவதற்குத் தந்திரங்கள் செய்யத் தொடங்கினால் நாம் செய்ய வேண்டிய தந்திரங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். வசந்தமாலை! நானும் சமய ஞானம், தத்துவ ஞானம் எல்லாம் கற்காமல் போனது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? அவற்றையெல்லாம் கற்றிருந்தால் இளங்குமரனை காதலிக்க முடியாவிட்டாலும் அவருடைய எதிரியாயிருந்து வாதம் புரிகிற பாக்கியமாவது எனக்குக் கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. ஒருவருக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பதைப்போல் நல்ல எதிரிகள் கிடைப்பதும் கூடத் தவப் பயன்தான். “இராவணனுக்கு இராமன் கிடைத்தது போல் கல்யாண குணங்கள் நிரம்பிய அழகிய எதிரியை அடைவதும் முற்பிறவியின் நற்பயன் போலும், காதலராக அடைய முடியாது தவிப்பதற்குப் பதில் நான் இளங்குமரனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/57&oldid=1231484" இலிருந்து மீள்விக்கப்பட்டது