உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

665

பெண்கள். பெண் குழந்தைகளுக்கு இந்த ஐம்படை ஆரத்தைக் காப்பாகக் கட்டமாட்டார்கள். பொன்னும், மணியும், முத்துமாக இந்த மாளிகை முழுவதும் செல்வம் இறைந்து கிடக்கிறது. இவ்வளவு பெரிய செல்வக் குவியலின் மேல் வீறுடன் நிமிர்ந்து நிற்கிற என் தந்தைக்கு இந்தச் சின்னஞ்சிறு பொன் ஐம்படைத் தாலியை இப்படிப் பாதுகாத்து ஒளித்து வைத்துப் போற்ற வேண்டிய அவசியம் என்னவென்பதுதான் எனக்குப் புரியவில்லை.”

“ஒன்றா, இரண்டா? இந்த மாளிகையில் இப்படிப் புரியாதவை எத்தனையோ? ஆனால் இதைப் பற்றி புரிந்துகொள்ள மட்டும் நாம் ஆவல் காட்டுவது பொருத்த மானதுதான் அம்மா! இந்த ஊன்றுகோலை உங்கள் தந்தையார் இங்கே வைத்ததிலேயே நமக்குப் பலவிதமான சந்தேகங்கள். தற்செயலாக இதன் பிடி சுழன்ற பின்போ இன்னும் பல புதிய சந்தேகங்கள். இதைப்பற்றி வலுவில் நாம் முயற்சி செய்யாமலே நமக்குச் செய்திகள் தெரிய வேண்டுமானால் அதற்காக ஒரு தந்திரம் செய்யலாம்” என்று வசந்தமாலை கூறிய வற்றில் சுரமஞ்சரி அக்கறை கொள்ளாதவள் போல மறுத்துவிட்டாள்:-

“நாம் ஒரு தந்திரமும் செய்ய வேண்டாம்! மற்றவர்கள் தந்திரத்துக்கு நாம் ஆளாகித் தவிப்பதே இன்னும் ஏழு பிறவிக்குப் போதுமடீ ! நம்முடைய தந்திரத்துக்கும் வேறு சிலர் ஆளாகித் தவிக்க வேண்டாம். தந்திரங்களால் வருகிற குழப்பங்களையும், துன்பங்களையும் பார்க்கும்போது இந்த உலகத்தில் கடவுள் எல்லா மனிதர்களையும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவே படைத்திருக்கக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது. மறுபேச்சுப் பேசாமல் அந்த ஐம்படை ஆரத்தை ஊன்றுகோலின் உள்ளே முன்பு இருந்ததைப் போலவே இட்டுப் பிடியையும் நன்றாகத் திருகி யாராவது பணிப்பெண் இங்கு வருகிறபோது கொடுத்துத் தந்தையாரிடம் சேர்க்கச் சொல்லிவிடு. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/56&oldid=1231483" இலிருந்து மீள்விக்கப்பட்டது