உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

690

மணிபல்லவம்

இங்கிருந்து வாரிக்கொண்டு போகலாமே?” என்று பொருளையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பேசிவிட்டாலும் அதே பேச்சையே இன்னும் ஒருமுறை பேசும்படி நகைவேழம்பர் கேட்டபோது பழைய கொதிப்போடும், பழைய வேகத்தோடும் பேச வரவில்லை. ஏதோ பேசினோம் என்று பேர் செய்வது போல் பேசினார் அவர்.

“இங்கிருந்து உங்களுக்கு வேண்டியதை வாரிக் கொண்டு போகலாம் என்று சொன்னேன்...”

“வேண்டியதை என்றால்...?”

“எதை வேண்டுமானாலும் வாரிக்கொண்டு போகலாம் என்று சொல்கிறேன்.”

“இன்னும் ஒருமுறை நன்றாகச் சிந்தித்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்.... ‘எதை வேண்டுமானாலும்’ என்று நீங்கள் சொல்லுகிறபோது அதில் எல்லாமே அடங்கிவிடுகிறது. ஒன்றும் மீதமில்லை.”

“நீ நஞ்சினும் கொடிய வஞ்சக அரக்கன், எதையும் மீதம் வைக்கமாட்டாய் என்று உணர்ந்துதான் அப்படிச் சொல்கிறேன்.”

“உணர்ந்துதானே அப்படிச் சொல்கிறீர்கள். நன்றி ஐயா நன்றி! நான் இப்போது இங்கிருந்து எனக்கு வேண்டிய மிக முக்கியமானதொரு பொருளைத்தான் வாரிக் கொண்டு போக எண்ணுகிறேன். அந்த முக்கியமான பொருள் இங்கே குவிந்திருக்கிற செல்வங்களை விடப் பெரியது. அதாவது நான் வாரிக் கொண்டு போக வேண்டிய பொருள் இதோ இங்கேதான் இருக்கிறது” என்று உள்ளடங்கிய கொதிப்போடு சொல்லிக் கொண்டே வந்த நகைவேழம்பர் குபீரென்று எரிமலை யாய்ச் சீறிப் பாய்ந்து பெருநிதிச் செல்வரின் நெஞ்சுக் குழியில் கையை மடக்கி வைத்து அழுத்தினார். நெஞ்சுக்குழியில் பாராங்கல்லைத் தூக்கி வைத்ததைப் போலப் பாரம் நிறைந்ததாயிருந்தது அந்தக் கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/81&oldid=1231511" இலிருந்து மீள்விக்கப்பட்டது