பக்கம்:மணி பல்லவம் 5.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

887

என்னுடைய கோபத்தை வளர்க்காதே. நான் மிகவும் பலவீனமான நிலையிலிருக்கிறேன். இந்நிலையில் எப்படி நடந்து கொள்வேனென்று எனக்கே தெரியாது! சந்தர்ப்பம் மறுபடி என்னைக் கொலைகாரனாக்கி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

“உங்களுடைய கோபத்தைப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் இந்த விதமான கோபம் கோழைகளுக்குத்தான் சொந்தமானது. யாரிடம் தவிர்க்க முடியாத காரணத்திற்காகக் கோபப்பட வேண்டுமோ அங்கேகூட அந்தக் கோபத்தை இழந்து விட்டு நிற்கவும், சிரிக்கவும் பக்குவமான வீரனால் முடியும். எல்லாவற்றுக்கும் பிடிவாதமாக முயல்வதைப் போலவே எல்லா ஆசைகளையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு இருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு முன்னால் வந்து நிற்பது என்னுடைய செல்வங்களை உங்களிடம் இருந்து மீட்டுக்கொண்டு போவதற்காக அன்று. எப்படி வாழக்கூடாதோ அப்படி நீங்கள் இதுவரை வாழ்ந்துவிட்டீர்கள். இதற்காக உங்களைப் பாராட்ட முடியாது. ஆனால் மன்னிக்கலாம். மன்னிக்க முடியும். அளவுக்கு மீறிய வறுமையைப் போலவே நீங்கள் கொடுமையும் துரோகமும், சூழ்ச்சியும் புரிந்து சேர்த்திருக்கும் அளவுக்கு மீறின செல்வமும் உங்களைச் சார்ந்துள்ள நோய்தான். நோயாளிகள், துன்பப்படுகிறவர்கள், ஏழைகள் ஆகியோர் மேல் எல்லாம் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே எனக்கு நிறைய அநுதாபம் உண்டு. இலஞ்சி மன்றத்திலும், உலக அறவியலிலுமுள்ள நோயாளிகளுக்காக நான் என் மனத்தின் உள்ளேயே அநுதாபப்பட்டு அழுவதுண்டு. அப்படி உங்களுக்காகவும் நான் அநுதாபப்பட்டு அழ முடியும். இதோ ஒருகணம் இப்படி என் பக்கமாகத் திரும்பித் தலை நிமிர்ந்து பாருங்கள். என்னுடைய உறவுகளையும், செல்வங்களையும், உங்களுடைய குரோதத்திற்கும் கொடுமைக்கும் சிறிது சிறிதாக இழந்து பறி கொடுத்துவிட்ட நான் அப்படி இழந்துவிட்ட உண்மையைத் தெரிந்துகொண்ட பின்னும் உங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/105&oldid=1231834" இலிருந்து மீள்விக்கப்பட்டது