பக்கம்:மணி பல்லவம் 5.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

907

"உன் விதி உனக்கு நன்றாயிருந்த வேளையில் என் விதி என்னைக் கைவிட்டு விட்டது. சுரமஞ்சரி! நீ இந்த வெற்றியை நன்றாகத் கொண்டாடலாம். ஏனென்றால் இந்த நகரத்தில் நாளங்காடி ஞான வீதியில் கூடிய பல நூறு தத்துவ ஞானிகளுக்கும், சமயவாதிகளுக்கும்கூட அவர்களுடைய அறிவின் பலத்தால் அடைய முடியாமற்போன வெற்றி இது. நீ உன்னுடைய உணர்ச்சிகளின் பலத்தாலேயே இந்த வெற்றியை என்னிடம் அடைந்து விட்டாய். ஆனால் இப்படி இப்போது உன்னுடைய வார்த்தைகளுக்குத் தோற்றவனின் மனத்தில் பெருகும் பரிதாபத்தை மட்டும் அளக்கவே முடியாது-”

“இன்று எந்த வார்த்தைகளால் உங்களை நான் வென்றதாகச் சொல்கிறீர்களோ அவை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த வார்த்தைகள்தாமே? நம்முடைய முதல் சந்திப்பின்போது கடறக்ரையில் நான் உங்களுக்கு மணி மாலை பரிசளிக்க முன்வந்த சமயத்தில், ‘கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தது. கொள்ளமாட்டேன் என மறுப்பது அதைவிட உயர்ந்தது’ என்று அன்றைக்கு நீங்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளைத்தான் இன்றைக்கு நான் உங்களிடம் பேசினேன். அன்று நீங்கள் என்னை வென்று விடக் காரணமாயிருந்த அதே வார்த்தைகள் இன்று நான் உங்களை வெற்றி கொள்ளக் காரணமாயிருந்தனவோ என்னவோ? எப்படியிருந்தாலும் வெற்றி உங்களுடைய வார்த்தைகளுக்குத்தானே?”

“வார்த்தைகள் பூக்களைப் போன்றவை. யார் நன்றாகத் தொடுத்தாலும் அவை அழகாயிருக்கும். வென்றவர்கள் பெருமைப்படவும் தோற்றவர்கள் துயரப் படவும் ஒரேவிதமான வார்த்தைகளே காரணமாயிருக்குமானால் என்ன செய்யலாம் ?”

“வென்றவர் தோற்றவர் என்ற பிரிவே நமக்குள் இங்கு இல்லை அன்பரே! இந்தத் தோல்வியிலும் நீங்கள் தான் என்னை வென்றிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்வில் கடைசி விநாடி வரை உங்களுக்குத் தோற்றுக் கொண்டி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/125&oldid=1231854" இலிருந்து மீள்விக்கப்பட்டது