பக்கம்:மணி பல்லவம் 5.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

820

மணிபல்லவம்

தீவுக்குப் பயணத்தைத் தொடங்கிவிடுவதென்று இருந்தேன். எல்லாம் அப்படியே நடந்தது. இருட்டியபின் நகர் அரவம் அடங்கி ஒய்கிறவரை சுடுகாட்டுக் கோட்டத்தின் பாழடைந்த காளிகோயிலில் மறைந்திருந்து விட்டு அப்புறம் வளநாடுடையாரைச் சந்திக்கப் போகலாம் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்செயலாக வளநாடுடையார் நான் ஒளிந்திருந்த அந்த இடத்துக்கே வந்து என்னைச் சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. நானும் அவரும் பேசவேண்டியவற்றையெல்லாம் எங்களுக்குள் பேசிக்கொண்டுவிட்டோம்.

“அன்று பின்னிரவு நேரத்தில் பூம்புகார்த் துறையில் நான் இந்தத் தீவுக்குக் கப்பலேறு முன்பு வளநாடுடையாரிடம் உன்னைப்பற்றிக் கூறிய சொற்கள் எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கின்றன. அந்தப் பிள்ளையின் தன்னம்பிக்கை அவனைக் காப்பாற்றும். தன்னைப் பிறர் வெற்றி கொள்ள விடாமல் தானே பிறரை வெற்றி கொள்ளும் மனம் அவனுக்கு இருக்கிறது. உலகத்தில் மிகப் பெரிய செல்வம் இப்படிப்பட்ட மனம்தான். இந்த மனம் உள்ளவர்கள் உடம்பினால் தோற்றுப் போனாலும் உள்ளத்தினால் வெற்றி பெறுவார்கள்! என்று உன்னைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அன்று அப்படிச் சொல்லிய நானே இன்று நீ உடம்பினாலும் தோற்றுப் போகக் கூடாதென்று கருதுகிறேன். நான் நீண்ட காலமாக உனக்குக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்த உன் தாயின் உருவத்தை இன்று நீயே இந்த ஓவிய மாடத்தில் பார்த்து விட்டாய். ஒருவேளை இங்கு நீ பார்த்த ஓவியங்களில் எது உன்னுடைய தாயின் ஓவியம் என்று புரியாமலே அதை உன் கண்கள் பார்த்திருக்கலாம். என்னுடன் மறுபடியும் வா! இப்போதே உனக்கு மீண்டும் அந்தப் புண்ணியவதியைக் காண்பிக்கிறேன்” என்று பூப்போல மென்மையாயிருந்த அவன் கையைப் பற்றி அழைத்துக் கொண்டுபோய் ஓவிய மாடத்திலே ஓரிடத்தில் அவனை நிறுத்தி வைத்தார்.