பக்கம்:மணி பல்லவம் 5.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

786

மணிபல்லவம்

யாரும், ஓவியன் மணிமார்பனும், விசாகையும், மணி நாகபுரத்து மண்ணின் பெருமையைச் சொல்லி மங்கல வாழ்த்துக் கூறியபோதும் அவனுடைய உணர்வுகள் தன் வாழ்வில் ஏதோ சில புதிய அநுபவங்களை எதிர் பார்த்தனவேயன்றி எந்தவிதமான செருக்கும் அடையவில்லை. பிறருடைய வாழ்த்தும், புகழ் வார்த்தைகளும் தன் மனத்தைக் கிளர்ச்சி கொள்ளச் செய்ய முடிந்த அளவு தனது எண்ணங்களையோ, நம்பிக்கைகளையோ மலிவாக வைத்துக் கொண்டிருக்கும் பலவீனமான வேளைகள் தன் வாழ்வில் வரலாகாது என்று அவன் உறுதியாயிருந்தான். உலகத்தில் துய்மையான புகழ் என அவன் நம்பியது, ‘நான் பழி வருவன எவற்றையும் எண்ணுவதில்லை; செய்வதில்லை; பேசுவதில்லை’ என்று ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே சத்யத்தில் மனப்பூர்வமாக நம்பிக்கை வைத்துத் தன்னைச் சோதித்துக் கொள்கிறானே அதுதான்! மெய்யான புகழ் ஒரு மனிதனுடைய ஏதாவதொரு திறமையை மட்டும் சார்ந்து நிற்பதில்லை. அந்தத் திறமையை ஆள்கின்றவன் தன் வாழ்வில் எவ்வளவுக்கு நியாயமான குணங்களைச் சார்ந்து நிற்கிறான் என்பதையும் பொறுத்துத்தான் இருக்கிறது. ‘பழிக்கு அஞ்சுவதுதான் பெரும் புகழ். புகழுக்கு ஆசைப்பட்டுத் தவிப்பதுதான் பெரும்பழி’ என்று தொல்காப்பியருடைய மெய்ப்பாட்டியலில் புகழ் என்னும் பெருமிதத்தைப் பற்றி இளங்குமரனுக்குக் கற்பிக்கும்போது திருநாங்கூரடிகள் கூறியிருந்தார். அறிவினால் வலிமையடைந்து மனம் வளர்த்தபின் நிறைவு குறைவுகளைப் பற்றிய இந்தப் புதிய தத்துவத்தை உணர்ந்திருந்தான் அவன.

ஆசைகள் குறைவதே பெரிய நிறைவு. ஆசைகள் குறைந்தால் அவற்றைச் சூழ்ந்திருக்கும் பல துன்பங்களும் குறைந்துவிடுகின்றன. மலைமேல் ஏறுகிறவன் கனமான பொருள்களைத் தலைச்சுமையாகச் சுமந்துகொண்டு மேலே போக முடியாததுபோல் மனத்தில் ஆசைகளைச் சுமந்துகொண்டு எண்ணங்களால் உயரத்துக்குப் போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/4&oldid=1231746" இலிருந்து மீள்விக்கப்பட்டது