பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுகட்டி நிறுவுகிறார். ஆசிரியரது, வாதத்திறமைக்கு அது இறவாத சான்றாகும். தலைவன் தலைவியர் பிரியாநிலை பகாப்பதமாகிறது. இவரது சொல்லாக்க வல்லமைக்கு இதுபோதும். வசந்தசேனை காதல் வளர்ச் சியை விளக்கும் விதம் செவ்விது. நுண்மாண் நுழைபுல வளத்தை அஃதுணர்த்தும். - பகுதி தோறும், தொடக்கவரி முன்கதையை மறவாது நினைப்பூட்டும்; பின்னதையும் தொடர்ந்து படிக்கத் தூண்டும். கலைச்சுவையுணர்வோடு எழுதுந்திறமது. ஆங்கில நாடகங்களோடு கதையமைப்பும் புலமைத் திறனும் பல இடங்களில் ஒப்பிடப்படுகின்றன. அங்கெல்லாம் கற்ற ஆங்கிலம் உற்றுழியுதவும் பெற்றிமை அறியவரும். பாம்பின் கால் பாம்பறியும் என்பர். புலமை மிக்கவர் புலமை புலவர்க்கே புலனாகும். தலை நின்ற புலமையால் பண்டிதமணியைக் கண்டுகாட்டியது விலை மதிப்பற்றது. நீராழம் காணுவதினும் பிறர் நெஞ்சாழம் காண்பதரிது. அரியது புரிவதில் பெரிய மகிழ்ச்சி வரும். இவர் நாடக மாந்தர் பலரது குணக்கடலில் ஆழ்ந்து மூழ்குகிறார். நெஞ்சாழத்தின் அடியிலே நின்று திளைக்கிறார்; குணம் குறைகளை இனமறிந்து பிரிக்கிறார். மனநலத்தோடு குணநலமும் சுட்டுகிறார். இங்ங்னம் பிறர்நெஞ்சு புகூஉம் பெற்றிமை போற்றற்குரியது. துணை என வரும் எதுவுமே முதலில் வழிகாட்டும்; முடிவில் விட்டு நீங்கும். இத்துணை நூலோ இடையில் விட்டு விலகுவதில்லை. மூல நூலோடு தேர்வடம்போலத் தொடர்ந்து இணையும். இதனால், இஃது துணைநூலோடு ஒரு இணைநூலும் ஆகும். பல பேரிலக்கியங்களுக்கும் இத்தகைய துணை நூல்கள் வெளியிடுதல் பலன்தரும். - Ꮾ