பக்கம்:மதன கல்யாணி-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 89

அதன் பிறகு கால் நாழிகை நேரம் கழிந்தது. உட்புறத்தில் நிச்சப்தம் குடிகொண்டிருந்தது. அவர்கள் என்ன செய்து கொண் டிருக்கிறார்களோ என்ற ஐயமும், கிழவி தனக்கு வாக்குக் கொடுத்தபடி திரும்பி வருவாளோ என்ற ஐயமும் உற்ற வண்ணம் மைனர் நின்று கொண்டிருந்தான். நாழிகை ஏறிக்கொண்டே இருந்தது. அவன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான்; அவனது மனோ வேதனை சகிக்க ஒண்ணாத நிலைமையை அடைந்தது. தன்னை கிழவி ஏமாற்றி இருப்பாளோ என்றும், தன்னைப் பற்றி அவளும் மோகனாங்கியும் புரளியாகப் பேசி ஏளனம் செய்து கொண்டிருப்பார்களோ என்றும் சந்தேகித்த மைனர் சஞ்சலத்திலும் துன்பத்திலும் ஆழ்ந்தான். தான் அன்று இரவு இரண்டு இடங்களில் ஏமாறிப் போனதற்குச் சிகரம் வைத்தது போல, அந்த மூன்றாவது இடத்திலும் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருக்குமோ என்று நினைத்து அவன் பலவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சமயத்தில், திடீரென்று தாய்க்கிழவி இரும்புக் கதவண்டை வந்து நின்று கனைத்துக் குரல் கொடுத்தாள். அவள் வந்துவிட்டாள் என்பதைக் கண்டவுடனே, மைனரது சந்தேகம் எல்லாம் பஞ்சாகப் பறந்தது; நம்பிக்கையும் மனோவிகாரமும் திரும்பவும் பொங்கி எழுந்தன; அவன் முற்றிலும் மோகாவேசம் கொண்டவனாய் அவளது முகத்தைக் கூர்ந்து நோக்கி, அது தனக்கு ஏற்படப் போகும் சுவர்க்க போகத்திற்கு முன்னறிகுறியாக சந்தோஷத்தைக் கட்டியதைக் கண்டு ஆனந்த பரவசம் அடைந்து, “பாட்டீ! காரியம் பழமா காயா? என்ன விதமான செய்தி கொண்டு வந்தாய்?” என்று கேட்டான். அந்த ஒரு நொடியும் அவனுக்கு ஒரு யுகம் போல இருந்தது. அப்போது கிழவி “நீர் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்” என்று கூறிய வண்ணம் இரும்புக் கதவின் பூட்டை விலக்கி, அதைச் சிறிதளவு திறந்து, அவள் உள்ளே வரும்பொருட்டு அவள் ஒரு பக்கமாக விலகி நின்றாள். அவளது கருத்தை உணர்ந்த மைனர் சடக்கென்று உள்ளே புகுந்தான். திரும்பவும் கதவைப் பூட்டிக் கொண்டே கிழவி, உட்புறத்தில் கட்டிடத்தை நோக்கி அழைத்துக் கொண்டு சென்றாள். தான் சுவர்க்க லோகத்துக்குப் போகும் பொருட்டு ஆகாசத்தில் மிதந்து கொண்டு செல்வதாக மைனர் நினைத்து தன்னையும், தனது நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/107&oldid=646984" இலிருந்து மீள்விக்கப்பட்டது