பக்கம்:மதன கல்யாணி-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 465

சேலையை எடுத்து அவர்களிருந்த இடத்தை நோக்கி வீசியெறிந்து, “உங்களுக்கு வேண்டியது இதோ இருக்கிறது. எடுத்துக் கொண்டு போங்கள்” என்றாள். அவளுடைய சொல்லைக் கேட்ட கட்டையன், “சரி, நல்லாச் சொன்னே? ஒன்னே இப்பிடியே விட்டுப்புட்டு போனா, நீ ஒடனே ஒடிப்போயி போலிசுக்காரப் பசங்களே இட்டாந்து எங்களைத் தொரத்தச் சொல்லிட மாட்டியா: அடேய்! இவளேப் புடிச்சு இந்த சன்னலுக்கம்பீலே கட்டி வாயிலே துணியெ அடச்சுடுங்க” என்றான்! அதைக் கேட்ட மற்ற திருடர்கள் மூவரும் சிறிதும் இரக்கமின்றி பாலாம்பாளைப் பிடித்து பரபர வென்று இழுத்து வந்து, ஜன்னலண்டையில் நிறுத்திவிட்டு, படுதாவின் மணிக்கயிற்றை அறுத்து வந்து, அவளது கைகளையும் கால்களையும் ஜன்னலின் கம்பியோடு சேர்த்து இறுகக் கட்டிய பிறகு, ஒரு சிறிய துணியைச் சுருட்டி அவளது வாயில் அடைத்து விட்டு, கட்டையன் குறவனிடம் வர, அவன் மூட்டைகளை எடுத்துக் கொள்ளும்படி உத்தரவு கொடுக்க, அவ்வாறே மற்றவர் எடுத்துக் கொள்ள, நால்வரும் வெளிப்பட்டு மெத்தைப் படிகளில் இறங்கிய போது, பங்களாவின் வாசலில் ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது; வெளியிலிருந்த இரும்புக் கதவைத் திருடர் திறந்து வைத்து விட்டு வந்திருந்தவர்கள் ஆதலால், மோட்டார் வண்டி எவ்வித இடையூறும் இன்றி உள்ளே வந்துவிட்டது; அதில் துப்பாக்கி கத்திகளோடு பத்து போலீஸ் ஜெவான்களும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும், நாடகத் தலைவரான கிழவரும் இருந்தனர். மோட்டார் வண்டி நின்றவுடனே, போலீசார் தங்களது லாந்தர் களோடு கீழே இறங்கி பதுங்கிப் பதுங்கி மெல்ல உள்ளே செல்ல, அவர்கள் வந்ததைக் கண்ட திருடர்கள் மிகவும் தந்திரமாக மறைந்து பின்புறம் இருந்த தோட்டத்திற்குள் போய் மூட்டைகளோடு மதிலில் ஏறி அப்பால் குதித்து ஒடிப் போய்விட்டனர். இன்னமும் திருடர் பங்களாவில் இருப்பதாக நினைத்த போலீசார் பங்களாவை ஆராய்ச்சி செய்ய, வேலைக்காரர் சிலர் இறந்து, சிலர் அடிபட்டு மூர்ச்சித்தும் கிடக்கக் கண்டனர். பாலாம்பாளின் கதி எப்படி ஆயிற்றோ என்பதை அறிய ஆவல் கொண்ட நாடகத் தலைவர் மெத்தை மேல் ஏறும்படி போலீசாரைத் துண்ட, அவர்கள் மிகவும் அச்சத்தோடும் எச்சரிக்கையாகவும் மேலே ஏறி, பாலாம்பாளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/183&oldid=649625" இலிருந்து மீள்விக்கப்பட்டது