பக்கம்:மதன கல்யாணி-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 217

வெளியாகப் போகிறது. நாம் இப்படியே பின்புறத்தில் போய் இருந்து என்ன நடக்கிறதென்பதைக் கவனிப்போம்” என்று கூறவே, அதைக் கேட்ட கோமளவல்லி, பெரிதும் அச்சமும் கவலையும் கொண்டு “அக்கா வேண்டாம். அம்மாள் கோபித்துக் கொள்வார்கள். அவர்களிடம் ஆயிரம் ரகசியங்கள் இருக்கும். அதை நாம் ஏன் கவனிக்க வேண்டும்? அவர்கள் இலை போடுவிக்கச் சொன்னபடி நாம் செய்யாமல் இதெல்லாம் நமக்கென்ன? நம்முடைய அம்மாளின் உத்தரவுக்கு நாம் கீழ்ப்படியாமல், அவர்களுடைய மனதுக்குப் பிடிக்காத காரியத்தை நாம் செய்வது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை” என்றாள். “இதனால் தான் நான் உன்னை சுத்தப் பட்டவர்த்தனம் என்று சொல்லுகிறது. அங்கே நடப்பதை பொன்னம்மாள்கூட இருந்து கேட்கப் போகிறாள். நமக்கு மாத்திரம் அது தெரியக் கூடாதோ? நாம் போய் சங்கதி என்ன என்பதை அறிந்து கொண்டு, அம்மாள் புறப்படுவதற்கு முன் போய் இலை போடச் செய்வோம்” என்று மிகவும் பதை பதைப்பாகக் கூறினாள். கோமளவல்லி தாம் செய்ய நினைக்கும் காரியம் அம்மாளின் விஷயத்தில் தாம் பெருத்த தவறு செய்வது போன்றதென்பதை அறிந்தாள் ஆனாலும், அக்காளின் மனம் கோணும்படி தான் நடந்து கொள்ளக் கூடாதென்ற நினைவினால், இருதலைக் கொள்ளி எறும்பு போல, எதையும் துணிந்து செய்ய மாட்டாமல் தயங்கினாள். அதைக் கண்ட துரைஸானியம்மாள், “சரி, நீ மீனமேஷம் பார்த்துக் கொண்டிரு; நீ வரவேண்டாம்; நான் போகிறேன்” என்று கூறிய வண்ணம் விசையாக நடந்து ஒரு குறுக்கு வழியில் சென்றாள். பேதமையே நிறைவாக இருந்த கோமளவல்லி, தனிமையில் போஜன மாளிகைக்குப் போக மாட்டாமல், தனது மனதிற்கு விரோதமாக, அக்காளைப் பின் தொடரலானாள். அவ்வாறு அந்த இளங்குமரிகள் இருவரும் விரைவாக நடந்து வேறு வழியாகச் சென்று, கல்யாணியம்மாளது சயன மாளிகையின் பின்புறமாகச் சென்று, அங்கிருந்த தாழ் வாரத்தில் நின்றபடியே, ஒரு ஜன்னலில் தொங்கிய விளாமிச்சம் வேர்த்தட்டியிலிருந்த இடுக்கின் வழியாக உட்புறத்தை நோக்கினர், அந்த ஜன்னல் அந்த மாளிகையின் உட்புறத்தில் ஒரு மூலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/235&oldid=649699" இலிருந்து மீள்விக்கப்பட்டது