பக்கம்:மதன கல்யாணி-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7

தவித்து நிற்கும்படி பித்தர்களாக்கி விட்டனர். அந்தப் பெண்மக்கள் யாவரிலும் மேலான வளுக்கு மோகனாங்கி என்று பெயர். அவள் மகாவிஷ்ணுவின் மோகனாவதாரத்தைப் போலவே சிருஷ்டிக்கப் பட்டிருந்தாள். அவள் மைசூர்க் கலாசாலையில் பி.ஏ. பரிட்சையில் படித்துத் தேறினவள், அழகிலோ அவளுக்கிணை அவளேயன்றி மற்றவரை அவளுக்கு இணை சொல்வது சிறிதும் பொருந்தாது. அவள் ஸ்திரிவேஷம் போட்டு வந்து விடுவாளானால் ஜனங்களின் மனதை முதலில் இருந்து கடைசி வரையில் காந்தம் போலக் கவர்ந்த வண்ணம் இருப்பாள். ஒரு நொடியில் ஜனங்களைச் சிரிக்கச் செய்வாள்; அடுத்த நொடியில் அவர்கள் கண்ணிர் சொரிந்து கதறி அழும்படி செய்து விடுவாள், அவளது குரலோ குயிலையும் யாழையும் பாகையும் தேனையும் தோற்கச் செய்வது. நாட்டியத்திலோ ஊர்வசி, திலோத்தமை என்னும் இந்திர லோகத்து தாசிகள் எப்படி நடிப்பார்கள் என்பதை பூலோகத்து ஜனங்கள் கண்டு அனுபவிக்கும்படி செய்பவள் அவளது தேகத்தின் அற்புதமான அமைப்பும் ஜாஜ்வல்லியமான வனப்பும் அவளைப் படைத்த சர்வ வல்லமையுள்ள ஈசுவரனையே மயக்கத் தக்கதாய் இருந்தன. அவளிடத்தில் இத்தனை மேம்பாடுகள் இருந்தும், அவள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஜனங் களுக்கு முன் வந்து நடிப்பவளானாலும், அவள் அந்தரங்கத்தில் மகாநற்குண நல்லொழுக்கம், அடக்கவொடுக்கம், பரபுருஷரை விஷமென மதிக்கும் பதிவிரதைக் குணம் முதலிய அரிய மேம்பாடுகளைப் பெற்றிருந்தாள். சென்னை முற்றிலும், அதைச் சுற்றி நெடுந்துரம் வரையிலும் உள்ள நாடக விருப்பம் உள்ள ஜனங்கள் எல்லோரும் அவளது சிறப்பைப் பற்றி புகழ்ந்து பேசி தங்களது பொழுதை எல்லாம் வீண் பொழுதாகப் போக்கிக் கொண்டிருந்தனர். பெருத்த பெருத்த மகாராஜர்கள் எல்லாம் அவளோடு தனிமையில் ஒரு வார்த்தை சொன்னாலும் தங்களது ஜென்மம் கடைத்தேறி விடும் என்று நினைத்ததன்றி. அவள் பொருட்டு தங்களது உடல் பொருள் ஆவி ஆகிய சகலத்தையும் அர்ப்பணம் செய்யத் தயாராக இருந்தனர். இவ்விஷயமாக அவளுக்கு ஒவ்வொரு நாளும் நூறு கடிதங்களுக்கு மேல் தபால் மூலமாகவும் ஆட்கள் மூலமாகவும் அனுப்பப்பட்டு வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/25&oldid=649729" இலிருந்து மீள்விக்கப்பட்டது