பக்கம்:மதன கல்யாணி-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 245

நோக்கி, அவர்கள் யாரோ தக்க பெரிய மனிதர்கள் என்பதை சந்தேகமற உணர்ந்து கொண்டனர் ஆதலால், முதலியாரது சொல் நம்பத்தக்கதாக இருந்ததன்றி அவர்களது மனதில் துணிவையும் உண்டாக்கியது.

இருவருள் ஒருவன் “இங்கே நேற்று ராத்திரி கொள்ளை நடந்தது முதல் இதுவரையில் இந்த வீட்டு எஜமானியம்மாள் படுத்த படுக்கையாய் இருப்பதால், எவர் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்று உத்தரவு செய்திருக்கிறார்கள். டாக்டர் மாத்திரம் வந்துவிட்டுப் போகிறார். ஆனால் நீங்கள் தக்க பெரிய மனிதர்களாகக் காணப்படுவதாலும், மிகவும் அவசரமான காரியமாக வந்திருப்பதாகச் சொல்லுவதாலும், நாங்கள் போய் அம்மாளிடம் சொல்லுகிறோம். அவர்கள் அழைத்துக் கொண்டு வரும்படி அனுமதி கொடுத்தால் அழைத்துப் போகிறோம். அது வரையில் இங்கேயே இருங்கள்” என்று கூற, சிவஞான முதலியார் “அப்படியே செய்யப்பா’ என்று நயமாக மறுமொழி கூறினார். உள்ளே இருந்து பேசிய மனிதன், மற்றவனை லாந்தரோடு அங்கேயே நின்று கொண்டிருக்கும்படி சொல்லி விட்டு விரைவாக உள்ளே சென்றான்.

அவ்வாறு சென்றவன் பத்து நிமிஷ நேரத்தில் திரும்பி வந்து சேர்ந்தான். பாலாம்பாள் அப்போது தங்களோடு பேச இணங்கு வாளோ மாட்டாளோ என்றும், அவளுக்கு ஆசை நாயகனுண் டானால், அவன் அப்போது அந்த பங்களாவில் இருப்பானோ என்றும் பெரிதும் கவலை கொண்டு நின்றிருந்த சிவஞான முதலியார், அவன் எவ்விதமான மறுமொழி சொல்வானோ என்ற ஆவலோடு அவனது முகத்தை நோக்கினார். அந்த மனிதன் கதவண்டை நெருங்கி வந்து மிகவும் பணிவான குரலில், “நான் போய்ச் சொன்னேன். நேற்றைய பயத்தினால், கதவைத் திறப்பதற்கே அம்மாள் பயப்படுகிறார்கள். இருந்தாலும், வந்திருப்பது யார் என்பதைக் கேட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள். நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை சொல்லுங்கள். நான் போய்ச் சொல்லிப் பார்க்கிறேன்” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/263&oldid=649759" இலிருந்து மீள்விக்கப்பட்டது