பக்கம்:மதன கல்யாணி-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 263

திறந்து, உங்களுடைய பிள்ளையை உள்ளே அனுப்பிவிட்டுப் போய்விட்டான். அவர் மளமளவென்று என்னுடைய கட்டிலண்டை வந்துவிட்டார். அந்த அபூர்வமான நிகழ்ச்சியைக் காண என்னுடைய ஆச்சரியம் பிரமாதமாகப் போய்விட்டது. எனக்கெதிரில் வந்து நின்ற மைனரைப் பார்த்து “யாரையா நீர்!” என்று நான் கேட்க, அவர் தம்முடைய பல்லைக் காட்டி நயமாக, தாம் மாரமங்கலம் மைனர் என்றும், சென்ற மூன்று நாள்களாய் வேலைக்காரனிடத்தில் சொல்லி அனுப்பிய சங்கதியைப் பற்றி நேரில் கேட்டுக் கொள்ளும்படி வந்ததாகவும் சொன்னார். உடனே எனக்குச் சகிக்க முடியாத கோபம் உண்டாகிவிட்டது. நான் அவரைப் பார்த்து, “ஐயா! நான் குடும்ப ஸ்திரீ என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தும் நீர் என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த அகாலத்தில் என்னுடைய படுக்கை அறைக்கு வந்தது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. எனக்கு நாதன் ஒருவர் இருக்கிறார். அவருடைய அபாரமான சொத்தெல்லாம் எனக்கே வந்த சேரப் போகிறது. அப்படி இருக்க, நீர் இங்கே வந்து அநியாயமாக என்னுடைய வாயில் மண்ணைப் போட்டு விடுவீர் போலிருக் கிறது. முதலில் நீர் வெளியில் போம்; ஒரு நிமிஷம்கூட இங்கே இருக்க வேண்டாம்” என்று கண்டித்துச் சொன்னேன். அவர் இந்த இடத்தை விட்டுப் போகாமல் என்னுடைய கட்டிலண்டையில் நெருங்கிவர முயன்று, மிகவும் நயந்து கெஞ்சிக் கூத்தாடி, நான் அவருக்கு வைப்பாட்டியாக இருந்தால் அல்லது, அவர் இங்கேயே உயிரை விட்டு விடுவதாகப் பிதற்றி, அவர்மேல் இரக்கம் கொள்ளும்படியாகவும் வேண்டி, அவர் என்னை சம்சாரம் போலவே பாவிப்பதாகவும், எனக்குக் கிடைக்கும் சொத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான சொத்தை அவர் தருவதாகவும் சொல்லியதன்றி, அதை ஒர் எட்டனா முத்திரைக் கடுதாசியில் எழுதிக் கொணர்ந்திருப்பதாகவும் கூறி, அவருடைய சட்டைப் பையில் இருந்த ஒரு பத்திரத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் அதை வாசிக்காமல் அலட்சியமாக அப்பால் போட்டுவிட்டு, அவரை நோக்கி, “நீர் சொல்லுவது எதுவும் எனக்கு சம்மதமில்லை. நீர் தயவு செய்து வெளியில் போம். எனக்கு வேறொரு நாதன் இருக்கிறார் என்றால், அதன் பிறகு பேசுவதே சரியல்ல” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/281&oldid=649798" இலிருந்து மீள்விக்கப்பட்டது