பக்கம்:மதன கல்யாணி-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மதன கல்யாணி

முதல் வரிசையில் இருந்த சோபாக்களில் தேனாம்பேட்டை வாசிகளான சமஸ்தானாதிபதிகளும், மகா பிரபுக்களும் நிறைந்து கம்பீரமாக உட்கார்ந்திருந்தனர்; அவர்களின் இடையில் நமது நமது துரைராஜாவும் மாரமங்கலம் மைனர் துரையும் இருந்தனர் என்று சொல்வது மிகையாகும். ஏனென்றால் அச்சில்லாமல் தேர் ஓடாதல்லவா? அவர்கள் இல்லாவிட்டால் அங்கே வந்திருந் தோருக்கு மகாஜனங்கள் என்ற பெயர் எப்படிப் பொருந்தும்? ஆகையால், அவர் மற்றவர் வருவதற்கு ஒரு நாழிகைக்கு முன்னரே வந்துவிட்ட்னர். உட்புறத்தில் நிற்கவும் இடமில்லை என்பது தெரிந்தும், நாடகக்காரர்கள் மேன்மேலும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு ஜனங்களை உள்ளே தள்ளித்தள்ளி அடைத்துக் கொண்டே இருந்தமையால், எலி நுழைய இடம் போதாத இண்டு இடுக்கு மூலை முடுக்குகளில் எல்லாம் ஜனங்கள் ஒடுங்கிக் கொண்டு, மோகனாங்கியை மாத்திரம் பார்த்தால் அது போதும் என்று ஒணானைப் போல தலைகளை நீட்டிக் கொண்டிருந்தனர். சிலருக்குக் கால்கள் நசுங்கித் துகையலாயின; சில பெண்டீரின் கம்மல் தொங்கிய காதுகள் அறுந்து போயின. சிறிது தாமதமாக வந்த வக்கீல்களான மூன்று கிழவர்களது சிரத்தில் எலிவாலைப் போலத் தொங்கிய குடுமிகள் போன இடம் தெரியவில்லை. அவர்கள் மோகனாங்கியை மறந்து தங்கள் குடுமிக் களவு இந்தியன் பினல் கோடின் எந்தப் பிரிவில் சேர்ந்தது என்பதைப் பற்றி யோசிக்கிறார்கள். புதிதாக முறுக்கேற்றி தும்பை மலர் போல சலலை செய்யப்பட்ட் மஸ்லின் சட்டைகள் சக்கை சக்கையாகக் கிழிந்து கோபித்துக் கொண்டு பல இடங்களுக்கும் போயின. ஜரிகைத் தலைப்பாகைகளும், ஷோக் அங்கவஸ்திரங்களும் கீழே விழுந்து காலால் துகையுண்டன. சிகரெட்டுப் புகையின் பரிமள கந்தமும், மூச்சுக்காற்றின் கொதிப்பும், நெருக்கத்தினால் உண்டான வியர்வைச் சேறும் ஒன்றுகூடி, அது சுவர்க்க போகமோ அல்லது நரக வேதனையோ என்ற சந்தேகத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

இத்தகைய லீலா விநோதங்களுக்கு இடையில் குலேபக்காவலி நாடகம் ஆரம்பமாயிற்று. மோகனாஸ்திரம் பாய்வது போல மனதைக் கவரக்கூடிய இனிமையான பாடல்களோடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/34&oldid=649897" இலிருந்து மீள்விக்கப்பட்டது