பக்கம்:மதன கல்யாணி-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 51

கருப்பாயியின் நட்பைச் சம்பாதித்துக் கொண்டு மாலையில் வருவதாக உறுதி சொல்லி விட்டுத் திரும்பி வந்தான் அல்லவா? அவன் தங்களுடைய பங்களாவை அடைந்து தனது தாயான கல்யாணியம்மாள் முதலியோரின் கண்ணில் படாமல் தனது பகற் போஜனத்தை முடித்துக் கொண்டு மாலையில் ஆலந்துருக்குப் போவதற்குத் தேவையான உயர்ந்த ஆடை ஆபரணங்கள் முதலிய சாமான்களை எல்லாம் எடுத்து ஆயத்தமாக வைத்துக் கொண்டிருந்தான். தனது எண்ணம் சுலபத்தில் பலிக்கப் போவதைக் கருதி மனக்கோட்டை கட்டி உலகத்தில் உள்ள அழகான பெண்கள் யாவரிலும் சிறந்தவளும் உலகத்தை ஆளும் மன்னாதி மன்னர்களுக்கும் கிடைக்காத பெண்கள் நாயகமுமான மோகனாங்கி தன்னிடம் காதல் மொழிக் கூறிக், கொஞ்சிக் குலாவி சரசசல்லாபம் செய்யும் பாக்கியம் அன்று இரவே தனக்கு ஒருகால் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று நினைத்து, பகற்கனவு கண்டு கொண்டிருந்தான். பொழுது ஏற ஏற அவனது பித்தம் தலைக்கேறியது. ஆசையும் ஆவலும் மலை போலப் பெருகி அவனது தேகத்திற்கும் மனத்திற்கும் முறுக்கேற்றின. ஆதலால் அவன் ஒய்வின்றி எழுவதும் உட்காருவதும் தனது விடுதியிலேயே உலாவுவதுமாக இருந்ததன்றி அவனது மனம் முற்றிலும் ஆலந்துர் பங்களாவிற்குள் இருந்த இன்ப வடிவத்திலேயே லயித்துப் போயிருந்தது ஆகையால், அவன் தன்னையும் தான் இருந்த உலகத்தையும் மறந்தவனாக இருந்தான். கடிகாரம் அப்போதைக்கப்போது மணியடித்த போதெல்லாம், அவன் அதைக் கவனித்து, “இன்னமும் பொழுது போகவில்லையே” என்று தவித்து ஒவ்வோர் உடையாக அணிந்தணிந்து கழற்றி நிலைக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டே இருந்தான். சரியாக மாலை ஆறு மணிக்குப் புறப்பட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு அதன் பொருட்டு தனது அலங்காரத்தை எல்லாம் பகல் மூன்று மணிக்கே செய்து முடித்துக் கொண்டவனாய் அவன் கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தான். மணி ஐந்தாயிற்று. அந்தச் சமயத்தில், அவனுக்கு முன்னால் ஒரு வேலைக்காரன் தோன்றிக் குனிந்து வணங்கி, “பெரிய எஜமானி யம்மாள் அழைக்கிறார்கள்” என்றான். அதைக் கேட்ட மைனருக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/69&oldid=649971" இலிருந்து மீள்விக்கப்பட்டது