பக்கம்:மதன கல்யாணி-3.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 269 பொறுக்கி நாடகங்களுக்குப் பழக்கி அந்தப் பள்ளிக்கூடத்தில் வேடிக்கையாக நடித்துக் கொண்டு வந்தார். எல்லோரும் அந்த நடிகனின் திறமையை வெகுவாகப் புகழ்ந்து பேசியதிலிருந்து, அவர் அந்தப் பெண்களை அழைத்துக் கொண்டு அயல் ஊர்களுக் கெல்லாம் போய் மைசூர் பாலிகா மனமோகன நாடகக் கம்பெனி என்ற பெயரோடு ஆடிவந்ததன்றி, பெண்களையும் பாதுகாத்து வந்தார். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் நாடகத்தில் அதிக விருப்பங் கொண்டவர் ஆதலால், அதைப் பற்றி எவ்வித ஆட்சேபமும் சொல்லாது மோகனாங்கியைக் கொஞ்ச காலம் அதில் விட்டு வைத்திருந்து, கடைசியில் நிறுத்திவிட்டார். அவ்வாறு அவள் நாடகத்தில் சேர்ந்து ஆடியவள் என்பதை எவரேனும் அறிந்தால், அவளைக் கலியாணம் செய்து கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணமும் உதித்தமையாலும், துரைராஜா அவளிடத்தில் அதிக மோகங் கொண்டிருந்ததன்றி, அவ்வளவு சிரேஷ்டமானவளை அடைந்து விட்டால், அவனது பெண் பைத்தியம் நிவர்த்தியாகி விடும் என்று தோன்றியதாகையாலும், கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் அவனுக்கே மோகனாங்கியைக் கலியாணம் செய்து கொடுத்து விடுவதென்று தீர்மானித்துவிட்டார். அதன் பிறகு ராஜாயி அம்மாளினது விஷயத்தையும் ஒருவாறு ஒழுங்குப்படுத்தினார். அவள் சுந்தரம் பிள்ளைக்கு வைப்பாட்டியாக இருந்தாள் என்பதை அவர் அறிந்து கொண்டார் ஆதலால், அவளை வேறே தகுதியான எவ்விடத்திலும் கலியாணம் செய்து கொடுக்கத் தோதுபடாமல் இருந்தது. சுந்தரம் பிள்ளை எவ்வித உறவினருமின்றி ஏகாங்கியாக இருந்தமையால், அவரது பிள்ளைப் பட்டத்தை மாற்றி அவரை சுந்தரப் பாண்டிய தேவராக்கி, நல்வழிப்படுத்தி, மைசூருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய சமஸ்தானத்தை அவர் பேரில் வாங்கி, அவரை ஜெமீந்தாராக்கி, அவருக்கே ராஜாயியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். சுந்தரம் பிள்ளையும், ராஜாயியும், போலிஸ் உத்தியோகஸ்தர்கள் போல வேஷந்தரித்து அநேக வழிப்பறிகளையும், மோசங்களையும் நடத்தியதைப் பற்றி அவர்களது வீட்டில் சோதனை போட வாரண்டு பிறந்திருந்தது முன்னரே சொல்லப்பட்ட விஷயம் ஆகையால் ஜெமீந்தார் அவர்களது வசத்திலிருந்த பணத்தைத் தவிர, மற்ற சகலமான