உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மதமும் மூடநம்பிக்கையும்


களுக்காகவும். புரோகிதர்களுக்கும் புனித வேதங்களுக்கும் மதிப்பு கொடுக்காதிருப்பவர்களுக்காகவும், பகுத்தறிவொளி காட்டும் பாதையில் நடந்து செல்பவர்களுக்காகவும், ஏமாற்றுத்தனத்தையும் பக்தியையும் கொள்ளாது ஆண்மையோடும் நல்ல தன்மையோடும் இருப்பவர்களுக்காகவும் அந்த நரகத்தில் நெருப்புகள் எரிந்து கொண்டிருப்பது உண்மையாக இருந்தாலும் இருக்கக்கூடும்; ஆனால், நான் மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறேன். அதற்குச் சான்று ஏதும் இல்லை என்று!

சுவர்க்கம் என்று ஒன்று இருப்பதும், அதனைக் கடவுள் வாழுமிடமாகக் கொண்டிருப்பதும், அங்கு தேவதைகள் ஓடியும்,ஆடியும், பறந்தும், பாடியும், நரகத்தில் அவதிப்படுவோரின் கூச்சல்களையும், முணுமுணுப்புகளையும் கேட்டு மகிழ்ச்சிகொள்வதும் உண்மையாக இருந்தாலும் இருக்கக் கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை!

இவையெல்லாம் பைத்தியக்காரர்கள் கண்ட கனவுகளிலும், காட்சிகளிலும் மட்டுமே நிலை நிற்கின்றன!

இயற்கைக்கு மீறிய ஆற்றல் ஒன்று இருப்பதும், அது உலகிலுள்ள பொருள்களையெல்லாம் காப்பாற்றி வருவதும், அது அவைகளுக்கு வழிகாட்டுவதும் ஆன செய்திகள் உண்மையாக இருந்தாலும் இருக்கக்கூடும் ; ஆனால் அந்த ஆற்றல் இருப்பது நிரூபித்துக் காட்டப்படவே யில்லை !

பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கைகள்–எண்ணங்கள், ஆற்றல்–பொருள் வளர்ச்சி–அழிவு, பிறப்பு–இறப்பு. மகிழ்ச்சி–வருத்தம், நல்லவர்கள் துன்புறுவது–தீயவர்கள் வெற்றிபெறுவது ஆகிய இவற்றிற்கிடையே இருக்கும் எந்த அறிவுள்ள நாணயமான மனிதனும், "நான் அதனை அறியவில்லை" என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.