உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மதமும் மூடநம்பிக்கையும்


ஒருவரின் கிழிந்த ஆடையைப் போன்றே ஒரே தன்மையாக விளங்கக் கூடியது என்பதையும் அவர்கள் அறிவார்கள். குதிரையின் மயிரும் மதத் தியாகி ஒருவரின் மயிரைப் போலவே, அவ்வளவு விரைவாகவும், எளிதாகவும் நோய்நொடிகளைப் போக்கக்கூடியதுதான் என்பதையும் அவர்கள் தெளிவாக அறிவார்கள். புனிதப்பொருள் எல்லாம் மதக் குப்பை என்பதை நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம். அந்தக் குப்பையைப் பயன்படுத்துவர்களெல்லாம் நாணயமற்றவர்கள் என்பதையும், அதனை நம்பி வாழ்பவர்கள் அத்துணைப் பெரும் முட்டாள்கள் என்பதையும் நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.

தாயத்துக்களிலும், மந்திரங்களிலும். பேய்களிலும் நம்பிக்கை வைப்பது மிகச் சாதாரணமான மூடநம்பிக்கையாகும்.

நமது முன்னோர்கள் இந்த அதிசயப் பொருள்களை நோய் தீர்க்கும் மருந்தாகவோ, அல்லது நோய் போக்கும் ஆற்றலாகவோ கருதவில்லை; மகான்சளின் புனிதப் பொருள்களைக் கண்டு பேய் பிசாசுகள் அஞ்சுகின்றன என்றே கருதினர். அந்தப் பேய் பிசாசுகள் மகானின் எலும்பைக் கண்டவுடனும், உண்மைச் சிலுவையின் மரத் துண்டைப் பார்த்தவுடனும், புனித நீர் தெளிக்கப்பட்டவுடனும் அஞ்சி அந்தந்த இடங்களை விட்டு ஓடிவிடுகின்றன என்று அவர்கள் நம்பினர். ஆகையினாலே அந்தப் பேய் பிசாசுகள் புனிதக் கோயில் மணியின் ஓசையைக் கேட்டு அஞ்சுவதுடன் ஓடி ஒளிந்துவிடுகின்றன என்றும், மெழுகுவர்த்தியின் ஒளியைக் கண்டதும், ஏசுவின் சிலுவையைப் பார்த்ததும் மிக அஞ்சி ஓடுகின்றன என்றும் அவர்கள் கருதி வந்தனர்.

அந்தக் காலங்களில் புரோகிதர்கள் பணம் என்னும் மீனைப் பிடிக்கும் தூண்டில்காரர்களாக இருந்து அதிசயப் பொருள்களைத் தூண்டில்களாகப் பயன்படுத்தி வந்தனர்!