உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மதமும் மூடநம்பிக்கையும்


துளித்தண்ணீரும் அதே அளவு வியப்பைத் தருகிறது; உலகம் முழுவதையும் போலவே, ஒரு தனி மணற்கல்லும் வியப்பைத் தருகிறது; எல்லா உயிரினங்களைப் போலவே, வண்ண இறக்கைகளைக் கொண்ட ஒரு விட்டில் பூச்சியும் வியப்பைத் தருகிறது. அகன்ற வானவெளியில் காணப்படும் எல்லா நட்சத்திரங்களைப் போலவே, ஒரு முட்டையும் வியப்பைத் தருகிறது; இருட்டில் வைக்கப்படும் முட்டையினுள் உள்ள உயிரணுவுக்குச், சூடு ஊட்டம் அளிக்கிறது. மூச்சுவிடும் உயிர்ப்பிண்டம் வளர்கிறது, தசைகள்– எலும்புகள்–நரம்புகள்–குருதி–மூளை எல்லாம் உருவாகின்றன. உணர்ச்சிகள் ஆசைகள்–எண்ணங்கள்–தேவைகள் வளர்கின்றன. இவையெல்லாம் வியப்புக்குரியவைகளாக இருக்கின்றன.

மண்ணிலே மறைந்து கிடக்கும் மிகச்சிறிய விதை, ஏப்ரல் மழைகளுக்காகக் கனவுகண்டு, ஜூன் வெயிலுக்காக் காத்திருந்து, அதனுடைய இரகசியங்களையெல்லாம், உலகிலுள்ள மிகச்சிறந்த அறிவாளிகளெல்லோராலும்கூட அறிந்து கொள்ளமுடியாத வகையில் மறைத்து வைத்து. வளர்த்து வருகிறது. உலகில் காணப்படும் மிகச்சிறந்த அறிவாளிகூட, காரணம் கூறமுடியாத அளவில் புல்லிதழ் ஒன்றின் தோற்றமும், மிகச்சிறிய இலையொன்றின் அசைவும் அமைந்திருக்கின்றன. மிகச்சிறிய பொருளின் வியப்பிற்கு முன்னால் மதவாதிகளும் -குருமார்களும்-பாதிரிமார்களும் போதகர்களும் வாய் திறக்கமுடியாதபடி நிற்கின்ற நிலைமையில் இருந்தும்கூட, அவர்கள் உலகங்களின் அடிப்படையை அறிந்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்; உலகங்கள் எப்பொழுது தோன்றின, எப்பொழுது அழியும் என்பதையும் அறிந்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்; கடவுளைப்பற்றிய எல்லாவற்றையும், அவர் எப்படிப்பட்ட விருப்பத்தோடு எல்லாவற்றையும் உண்டாக்கினார் என்பதையும் அறிந்திருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள்: அவர், எப்படிப்பட்ட திட்டத்தையும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறார், எந்த வழிகளைப் பயன்படுத்துகிறார்,