பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 அ.ச. ஞானசம்பந்தன்


சித்தர்களுக்கு எங்கேயும் போகவேண்டிய நிலையில்லை. எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற அவர்கள், பரம்பொருளின் ஆணைபெற்று வந்து அங்கங்கே வந்து தங்கி பணி புரிகின்றவர்கள். ஆகையினாலே அவர்களுக்கு விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. வேண்டப்பட்டவர்கள், வேண்டாதவர்கள் எதுவும் கிடையாது. அவர்கள் இதைச் செய்ய வேண்டுமென்ற சட்டதிட்டமும் இல்லை. இதைச் செய்துதான் முன்னேற வேண்டு மென்ற பிரச்சினையும் கிடையாது. ஆகவே எது தேவையோ அதைக் கூசாமல் சொல்லுவார்கள். எப்படி மருத்துவன் அறுவையினாலேதான் அதைப் போக்க முடியும் என்றால் கருணை காட்ட மாட்டான். அறுத்துத் தள்ளிவிடுவான். அறுவை சிகிச்சையினாலே தான் அவனை வாழ வைக்க முடியும் என்றால் பண்புடைய வைத்தியன், ஐயோ பாவம்' என்று கருதினான் என்றால் அவன் பண்புடைய மருத்துவன் அல்லன். வருந்தினாலும், அழுதாலும் கவலையில்லை. அதைத்தான் ஆழ்வார் சொல்லுவார்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன்

என்று. அதுபோல் சமுதாயத்திலே இருக்கிற துன்பங் களைத் தவறுகளைப் போக்க வேண்டுமானால், இந்தச் சித்தர்கள் பளார் பளார் என்று அடிப்பார்கள். ஆக மென்மையாகச் சொல்கிற வழக்கம் கிடையாது. எப்படியாவது அதைப் போக்க வேண்டு மென்ற ஒரே நோக்கம்தான் அவர்களுக்கு. ஆகவே சொல்கிறார்.