உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

மனத்தின் தோற்றம்



அகப்பொருள் துறையில் வேலன் வெறியாட்டு என்பது பெயராகும்.

தலைவி தோழிக்குச் சொல்லுகிறாள்:- தோழியே! என் காதலனால் உண்டான நோயை முருகனால் உண்டான நோயாக அன்னை எண்ணி வெறியாடும் வேலனை வரச் சொல்லியுள்ளாள். இது நகைப்புக்கு உரியது தோழியே! (இது நகையாகின்றே தோழி).

ஆய் வளையல் அணிந்த தோழியே மலை நாடனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வேலன் வருமாயின் உண்மை நோயை அறியாததால் அவனால் தீர்க்க முடியாதாதலின் அவ்வேலன் அறிவிலியாவான். மற்றும், அவ்வேலன்மேல் ஏறியாடச் செய்யும் குருகுபெயர்க் குன்றம் தொலைந்த முருகனும் மடவோனேயாவன். இது நகையாகின்றே.

செறிவளைக் கை நல்லாய்! வெறிகமழ் வெற்பனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வரும் வேலன் மடையன். ஆலமர் செல்வனாகிய சிவனின் மகனாகிய முருகன் அவன்மேல் வரின் அவ்வேலனைவிடப் பெரிய மடையனாவான். இது நகையாகின்றே! நேரிழை நல்லாய் மலை நாடனாகிய என் தலைவனது மார்பு தந்த கொடிய நோயைத் தீர்க்க வரும் வேலன் மடவோனாவான். கடப்ப மாலை யணிந்த முருகன் வேலன் மேல் ஏறி வரின், அவனினும் இவன் கடைந்தெடுத்த பெரிய மடவோனாவான். இது நகையாகின்றே! என்று தலைவி தோழிக்குக் கூறினாள். இனிப் பாடல் பகுதிகள் வருமாறு:

1.          ‘இறைவளை கல்லாய்! இது நகை யாகின்றே

கறிவளர் தண்சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள்.’