பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மனிதன் எங்கே செல்கிறான்?


'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை யிலாத சொலல்'

என்ற சொற்களை எண்ணி எண்ணி வாழ வேண்டுவது தமிழர் தம் கடமையன்றோ? மற்றவர் மனம் கோணா வகையில் பேசுவது வாய்மை என்றால், பிறருக்கு நன்மை தருவதற்காகப் பொய்கூடச் சொல்லலாமோ என்ற ஐயம் எழுவது இயற்கையன்றோ? வள்ளுவர் அந்த ஐயத்தையும் போக்குகின்றார். 'பொய்யால் நன்மை வருவதாயின், அதைச் சொல்லலாம். ஆனால் அந்த நன்மை மற்றொருவருக்குத் தீங்கிழைக்கும் வழி வரலாகாது,' என்பதே அவர் கொள்கை. ஆம்! யாருக்கும் யாதொரு தீங்கும் பயவாத வகையில், மற்றவர்களுக்கு நன்மை உண்டாகக் கூறும் பொய்ம்மையும் வாய்மையின் பாற் பட்டதேயாம் என்பர் அவர். இதோ அவர் வாக்கு.

'பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.'

ஈண்டுப் 'புரைதீர்ந்த' என்பதற்கு உரையாசிரியர்கள் 'குற்றத்தின் நீங்கிய' என்று உரை எழுதுகின்றனர். மற்றவர்களை வருத்தும் குற்றத்தினின்று அது நீங்கியது என்பது பொருள். எனவே, யார்க்கும் தீங்கிழைக்காது பிறர்க்கு இன்பம் பயக்கவல்ல பொய்ம்மையும் மெய்யாகும் நாகரிகம் வள்ளுவர் கண்டது.

இவ்வாறே ஒவ்வொரு பொருள் பற்றியும் வகுத்துப் பேசும் வள்ளுவர் அடிப்படையில் மற்றவர்களுக்குத் தீங்கிழையாப் பெருநெறியை வற்புறுத்துவார். அது தானே உண்மை உலகியலும்! உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் தம்முள் மாறுபாடற்று மகிழ வேண்டும் என்பதுதான் நியதி. அதை விடுத்து, தானே வாழ் வேண்டும் என்ற தருக்கில் மற்றவரை வாட விடுவது. மனிதப் பண்பாகுமா? ஆகாதே! எனவே, வள்ளுவரை உண்மையில் அறிபவர்-அவர்தம் நூல்வழி 'வாழ விழை-