பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மனிதன் எங்கே செல்கிறான்?


வேண்டுமே ! என்று மனிதஉள்ளம் வள்ளுவர் காட்டிய வாய்மை நெறி வழி திறக்கப்படுகிறதோ, அன்று உலகம் உய்யும்; உயிர்கள் துன்பற்று உலவும்; விண்ணும் மண்ணும் யாரும் யாவும் இன்நெறியில் இயங்கலாம். அந்த நல்ல நாளுக்கு வழிகாட்டியாக இவ்வள்ளுவர்விழா அமைவதாக! இம்மாநாடு, அந்தநல்ல நாளைக் காட்டும் ஒளிவிளக்காக அமைவதாக! அவ்வொளி விளக்கினைக்காண மக்கள் உள்ளங்கள் திறப்பதாக உள்ளொளி பெருக்க நல்லொளி விளக்கமாகிய வள்ளுவர் வாய்மொழியைப் பற்றி யாதொரு வேறுபாடும் வேற்றுமையும் துயரும் துன்பமுமற்ற எழிலார் இன்ப உலகுக்கு எல்லோரும் செல்வோமாக அங்கு வசியும் வளனும் சுரக்கும்; எல்லோரும் எல்லாச் செல்வமும் பெறுவர். அந்நாளில் ஏழையும் பணக்காரரும் இரார். உயர்ந்தோர் தாழ்ந்தோர் இருக்க மாட்டார். சாதியும் சமயமும் காழ்ப்புக் கொள்ள. நீதியும் நிறமும் போட்டியிடா அந்த நல்ல நாள் நாட்டில் அரும்ப அனைவரும் எண்ணுங்கள். இங்குக் கூடியுள்ள அனைவரும் உள்ளத்தால் எண்ணுங்கள்-தொடர்ந்து எண்ணுங்கள். எண்ணியது பெறும் வரை எண்ணுங்கள். உங்கள் எண்ணம் திண்ணிய தாயின், நீங்கள் அந்த நாளை விரைந்து பெறுவீர்கள்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்.

என்ற வள்ளுவர் வாக்கை உங்கள் முன்-உங்கள் திறந்த உள்ளத்தின் முன்-வைக்கின்றேன்; உலகம் அவ்வாறு எண்ணட்டும்! அவ்வெண்ணம் ஒரு நல்லுலகை உடனே தோற்றுவிக்கட்டும்! அன்பும் அருளும் அறனும் அந்நாளில் செழிக்க வழியுண்டு, ஆம்! அனைவரும் ஒன்றிய உளத்தினராய் அந்நாள் வேண்டி உளந்திறந்து ஒன்று கூடுவோம். கூடி முன்னேறிச் செல்வோம்! இம் மாநாட்டு நிகழ்ச்சி அவ்வுலகை விரைவில் நம்மிடைக் கொண்டு வர வழிகாட்டுவதாக!

வாழ்க வள்ளுவர்! வளர்க அறநெறி!