பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதன் எங்கே செல்கிறான்?

11


பயக்கும் செயலென்றும். அல்லா தனவெல்லாம் தீமை பயக்கும் செயலென்றும் அறிவோடு கலந்த அவன் மனச்சான்று உணர்த்திற்று. எனவே, ‘வையகமும் துயர் தீர்க’ என்ற நல்ல அடிப்படையிலே அவன் வாழலானான். அவ்வாழ்வே அவனுக்கு நல்லறிவையும், அவ்வறிவால் அனைத்தையும் கட்டியாளும் ஆற்றலையும் தந்தது.

அறிவு என்னும் போது இன்று உலகில் சாதாரணமாகத் தேர்வில் பெறும் எண்ணைக் கணக்கிட்டு அதை அளக்கும் நிலை வந்துவிட்டதை நாம் அறிவோம். வாழ்விற்குத் தேவையற்ற பல பாடங்களைப் படித்தோ படியாமலோ, எப்படியோ ‘மார்க்குகள்’ வாங்கும் இந்த ஓர் இழிநிலையைத் தமிழன் அறிவு என்று கொள்ளவில்லை. ‘கற்றனைத்தூறும் அறிவு,’ என்று வள்ளுவர் கூறியது உண்மைதான். அனால், கல்வி பலனற்ற வகையில் செல்வதை அவர் கூறவில்லை. ‘கற்றபின் அதற்குத்தக நிற்கும்’ கல்வியே அவர் காட்டிய கல்வி. ‘துணியும் ஆயிரம் சாத்திரம் கற்கினும், சொல்லுவார் எள் துணைப் பயன் கண்டிலார்,’ என்ற பாரதியாரின் வாக்குப்படியன்றோ இன்றைய உலகக் கல்வி அமைகின்றது? அதனாலேதான் தமிழர் இந்தக் கவைக்குதவாக் கல்வியைக் கொண்டு அறிவை அளக்க விரும்பவில்லை. நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆராய்ந்து செயலாற்றும் நன்முறையையே அறிவு அளக்கும் கருவியாகக் கொண்டனர். ‘அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய, செறுவார்க்கும் செய்யாவிடல்,’ என்ற அடிகளிலே வள்ளுவர் நமக்கு உண்மை அறிவைக் காட்டுகின்றார். தமக்கு மாறுபட்டுத் தீங்கிழைப்பார்க்குங்கூடத் தவறியும் தீங்கு செய்யாதிருத்தலே அறிவு என்பது வள்ளுவரது உள்ளக்கிடக்கை. ‘அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய், தன் நோய்போல் போற்றாக் கடை?’ என்ற அவர் சொற்களும் அவ்வுள்ளக் கிடக்கையை வலியுறுத்துவன அல்லவோ!